சர்க்கரை நோய்… அறிகுறிகள் அறிவோம்!

 

சர்க்கரை நோய்… அறிகுறிகள் அறிவோம்!

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைச் சர்க்கரை நோய், நீரிழிவு என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் டயாபடிஸ் மெலிடஸ் என்று சொல்வார்கள். சுருக்கமாக டயாபடிஸ். நம்முடைய உடல் போதுமான அளவு இன்சுலினை சுரக்கவில்லை அல்லது இன்சுலின் செயல்திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது இதயம், கண், சிறுநீரகம், நரம்பு மண்டலம், இனப்பெருக்க மண்டலம், பாதம் என எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே, சர்க்கரை நோய் வராமல் தடுப்பதும் வந்தால் கட்டுக்குள் வைப்பதும் அவசியமாகிறது.

சர்க்கரை நோய்… அறிகுறிகள் அறிவோம்!

சர்க்கரை நோயில் இரண்டு வகை உள்ளது. அவை டைப் 1, டைப் 2. டைப் 1 என்பது பிறவிக் குறைபாடு அல்லது ஆட்டோ இம்யூன் எனப்படும் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே கணையத்தில் இன்சுலினை சுரக்கும் செல்களை அழிப்பதால் காரணமாக இன்சுலின் சுரப்பு முற்றிலும் இல்லாத நிலை ஆகும்.

டைப் 2 என்பது நன்றாக சுரந்துகொண்டிருந்த இன்சுலின் அளவு படிப்படியாகக் குறைவது, இன்சுலின் செயல்திறன் குறைவு காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஆகும்.

இது தவிர சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை, கர்ப்ப கால சர்க்கரை நோய் என்று இரண்டு உள்ளது.

அறிகுறிகள்

பசி

தாகம்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு

பார்வைத் திறன் மங்குதல்

சோர்வு

புண்கள் ஆறாமை

சர்க்கரை நோய்… அறிகுறிகள் அறிவோம்!

சோர்வு, பசி:

நாம் உட்கொள்ளும் உணவு செரிமானத்துக்குப் பிறகு குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இதுதான் நம்முடைய உடல் செல்களுக்கான ஆற்றலைத் தருகிறது. இந்த செல்கள் சர்க்கரையை ஈர்க்க இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் பற்றாக்குறை காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களால் ஈர்க்க முடியவில்லை. இதனால், உணவு தேவை என்று அவை மூளைக்குச் சொல்கின்றது. இதனால் அதீத பசி ஏற்படுகிறது.

தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது. உடலில் உள்ள தண்ணீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் தாகம் ஏற்படுகிறது. தாகத்துக்குத் தண்ணீர் குடிப்போம், சர்க்கரையை வெளியேற்றும் நோக்கில் அந்த தண்ணீரையும் சிறுநீரகம் வெளியேற்றிவிடும். இதனால் மீண்டும் மீண்டும் தாகம், சிறுநீர் கழித்தல் நிகழ்கிறது.

சர்க்கரை நோய்… அறிகுறிகள் அறிவோம்!

வாய் உலர்தல், சருமத்தில் ஈரப்பதம் இன்மை:

உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை சிறுநீரகம் வெளியேற்றுவதால் வாய் மற்றும் சருமத்தில் உள்ள ஈரப்பதம் பாதிக்கப்படுகிறது. இதனால் உலர்ந்த சருமம், உதடு ஏற்படுகிறது.

பார்வைத் திறன் மங்குதல்

உடலின் நீர் அளவில் தொடர்ந்து மாறுபாடு இருப்பதால் அது கண்ணிலும் வெளிப்படுகிறது. கண்ணின் கண்ணீர் அளவு குறைவதால் கண்கள் உலர்ந்து மங்கலாகிறது.

உடல் எடை குறைவு

சர்க்கரை நோயாளிகளுக்கு திடீர் உடல் எடை குறைதல் பிரச்னை வரும். நாம் சாப்பிட்ட உணவில் இருந்து ரத்தத்தில் கலக்கப்பட்ட சர்க்கரையை உடல் பயன்படுத்தவில்லை. இதனால் உடல் ஏற்கனவே உடலில் உள்ள கொழுப்பை எரிக்க ஆரம்பிக்கிறது. இதனால் திடீர் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது.

புண்கள் குணமாக தாமதம்

புண்கள் குறிப்பாக காலில் ஏற்படும் புண்கள் காயம் ஆற நாட்கள் ஆகிறது என்றால் அது சர்க்கரை பாதிப்பாக இருக்கலாம். சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது புண்கள் சீக்கிரம் ஆறாது.