சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட பிறகு மாத்திரை எடுப்பது சரியா?
சர்க்கரை நோயாளிகளுக்கு மெட்ஃபார்மின் மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக சாப்பிடுவதற்கு முன்பு இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், பல நேரங்களில் சாப்பிடுவதற்கு முன்பு மாத்திரை சாப்பிடப் பலரும் மறந்துவிடுகின்றனர். இதனால் சாப்பிட்ட பிறகு மாத்திரை சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் மாத்திரையைத் தவிர்த்துவிடுகின்றனர்.
மெட்ஃபார்மின் என்பது ஆரம்பநிலை மாத்திரையாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மிகவும் பாதுகாப்பான மருந்து இது. இதில் பல டோஸ்கள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் எடை, உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை என பல்வேறு காரணிகள் அடிப்படையில் யாருக்கு என்ன டோஸ் மாத்திரை என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.
மெட்ஃபார்மின் மாத்திரை எடுப்பது இன்சுலின் செயல்திறனை மேம்படுத்த உதவும். இதன் காரணமாக செல்கள் குளுக்கோஸை பயன்படுத்துவது அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறையும். அடுத்ததாக இது கல்லீரலுக்கு சென்று கல்லீரல் அதிக அளவில் குளுக்கோஸை உற்பத்தி செய்வதைத் தடுக்கும். இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை கலப்பது குறையும். மூன்றாவதாகச் சிறுகுடலில் குளுக்கோஸ் - சர்க்கரையை வயிறு கிரகிப்பதைத் தடுத்து நிறுத்தும்.
இந்த காரணங்கள் காரணமாக பசியின்மை, உடல் எடை குறைவு போன்ற பின்விளைவுகள் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி, தசை வலி, உடல் வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவே சாப்பிடுவதற்கு முன்பு மெட்ஃபார்மின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மெட்ஃபார்மின் மாத்திரையை எடுத்துக்கொண்டதுமே சாப்பிட ஆரம்பித்துவிடுவது நல்லது. மாத்திரை போட்டு 5, 10 நிமிடம் சாப்பிடுவது எல்லாம் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு மாத்திரை மறந்துவிட்டால் தவறு இல்லை... சாப்பிட்டு முடித்ததுமே மெட்ஃபார்மின் மாத்திரையைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக மாத்திரை போடுவதையே பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
மெட்ஃபார்மின் மாத்திரை எடுப்பது வைட்டமின் பி12 சத்து குறைபாட்டையும் ஏற்படுத்திவிடலாம். நீண்ட காலம் மெட்ஃபார்மின் மாத்திரை போடுபவர்கள், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைட்டமின் பி12 சத்து மாத்திரையையும் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது.


