நுரையீரல் புற்றுநோய் தவிர்க்க வழிகள்!

 
Lung Cancer

புற்றுநோய் மரணங்களில் முதன்மையிடத்தை நுரையீரல் புற்றுநோய் பிடித்துள்ளது. உலக அளவில் ஏற்படும் புற்றுநோய் உயிரிழப்புகளில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சிகரெட் புகைப்பவர்கள் மட்டுமின்றி, சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்குக் கூட நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட சிகரெட் பழக்கமே மிக முக்கிய காரணமாக உள்ளது. ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் பிடிக்கிறோமோ, அதற்கு ஏற்ப நமக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. தலைவலி, சுவாசத்தில் பிரச்னை, இருமலின் போது ரத்தம் வெளிப்படுவது, இடைவிடாமல் தொடர்ந்து இருமல், எலும்பு வரை ஆழமான வலி ஏற்படுவது போன்றவை நுரையீரல் புற்றுநோயின் ஒரு சில அறிகுறிகள் ஆகும்.

பப்மெட் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம் அடிப்படையில் 90 சதவிகித புற்றுநோய் ஏற்பட சிகரெட் பழக்கமே காரணமாக இருக்கிறது. சிகரெட் பிடிக்கும் ஆணுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இதுவே பெண்ணுக்கு 25.7 சதவிகிதம் அதிக வாய்ப்பு உள்ளதாம்.

சிகரெட் புகைப்பதை நிறுத்தினாலே மிகப்பெரிய அளவில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சிகரெட் புகைப்பதை நிறுத்திய ஒரு சில ஆண்டுகளிலேயே நுரையீரல் திசுக்கள் தங்களைப் புதுப்பிக்கத் தொடங்கிவிடும். இப்படி செல்கள் புதுப்பிப்பது வயது அடிப்படையில் வேறுபடலாம்.

ஒருவர் வெளியிட்ட சிகரெட் புகையை சுவாசித்தவருக்கு கூட புற்றுநோய் ஏற்படலாம். எனவே, புகைபிடிப்பவர்கள் அருகில் செல்லாமல் இருப்பதே நல்லது.

சிகரெட் புகைப்பதை நிறுத்துவது எவ்வளவு நல்லதோ, அதே போல் உடற்பயிற்சி செய்வதும் நுரையீரல் புற்றுநோய் வருவதைத் தவிர்க்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 20 முதல் 50 சதவிகிதம் வரை குறைகிறது.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நுரையீரல் செயல்திறன் மேம்படுகிறது. சிகரெட் புகையால் மரபணு அளவில் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்படுகிறது. இவை அனைத்தும் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன.

உணவில் அதிக காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்வது எல்லா வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் மிகப் பெரிய அளவில் குறைக்கும். காய்கறி, பழங்கள், சோயா பொருட்கள், மீன் உணவுகள் மிகவும் நல்லது. அதே நேரத்தில் ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சி உள்ளிட்டவை புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே, உணவில் கூடுதல் கவனம் தேவை.