பனிக்காலத்தில் ஆஸ்பத்திரிக்கு வழி கேக்காமலிருக்க சில வழிகள்

 
winter

குளிர் காலத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

தமிழகத்தில், நவம்பர் - ஜனவரி வரை குளிர், மழைக்காலம். இந்தப் பருவத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, ‘வைரஸ்’ தொற்று முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் தாக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடித்தால் நோய் வராமல் காத்து கொள்ளலாம்.

 தோலில் வறட்சி, அரிப்பு, தலையில் பொடுகு அதிகம் இருக்கும். நீரிழிவு கோளாறு உள்ளவர்களுக்கு, அதிகமாக தோலின் நிறம் கறுப்பது, உதடுகளில் வெடிப்பு வரலாம். தினமும் தலையில் எண்ணெய் தேய்ப்பது, மிருதுவான சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது, வெடிப்பு இருக்கும் இடத்தில் அவரவரின் தோலுக்கு ஏற்ற களிம்பு தடவுவது, வாரம் ஒருமுறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வறட்சியைப் போக்கும். 

குளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் - உணவுமுறையும்

பனிக்காலத்தில் நமது உடலை நோயின்றி பாதுகாப்பதற்கான பத்து வழிமுறைகள்

1. தசை வலி - குளிர்காலத்தில் உடல் அதிக நேரம் அசைவின்றி இருக்கக்கூடாது. உடலுக்குக் கதகதப்பு அளிக்கும் சில உடற்பயிற்சிகள், நிமிர்வது, குனிவது போன்ற அசைவுகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால், குளிரினால் ஏற்படும் உடல் மற்றும் தசை

வலி நீங்கும்.

2. சூடான உணவு -  உணவை மிதமானச் சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும்.

3. உணவு முறை - எளிதில் செரிக்கக் கூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம்.  அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.

4. தேநீர் - தோல் நீக்கிய இஞ்சி, சிறிதளவு, புதினா, ஏலக்காய் ஆகியவற்றுடன் நாட்டுச் சர்க்கரை கலந்த இஞ்சி தேநீர் தயாரித்து அடிக்கடி குடிக்கலாம், அல்லது சுடு தண்ணீரும் குடிக்கலாம். 

5. சரும வறட்சி - குளிக்கச் செல்லும்முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழையைக் கூழாக அரைத்து முகம் மற்றும் உடலில் தேய்த்தாலும் சருமம் மிருதுவாக இருக்கும். ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்னை உடையவர்கள் கற்றாழை க்ரீம் பயன்படுத்தலாம்.

6. வெந்நீர் குளியல் - குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் நல்லது. அதிக சூடான தண்ணீரில், அதிக நேரம் குளித்தால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். அதனால் வெதுவெதுப்பான சூட்டில் குளிக்க வேண்டும்.

7. தண்ணீர் - பனிக்காலத்தில் தாகம் குறைவாக ஏற்படும். அதனால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, வேறு பிரச்னைகளை உருவாக்கும். எனவே, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும்.

8. பொடுகுப் பிரச்னை - சருமத்தைப் போன்று தலையிலும் வறட்சி ஏற்படுவதால், பனிக்காலத்தில் பொடுகுப் பிரச்னை எளிதில் வந்துவிடும்.

சிறிது வெள்ளை மிளகை ஒரு கிண்ணம் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து,  அந்தக் கலவையை சூடு ஏறும் வரை வெயிலில் காய வைத்து, தலைக்குத் தடவலாம். இது தலைமுடியில் பிசுபிசுப்பையும் பொடுகையும் நீக்கும்.

9. ஆடை தேர்வு - அதிக குளிர் காணப்படும் நேரத்தில்  உடலுக்குக் கதகதப்பு தரும் கம்பளி ஆடைகளை உடுத்த வேண்டும்.  இந்த ஆடைகள் குளிர்காலத்தில் வரும் நடுக்கத்தைக் குறைக்கும். கை, கால்கள், மூக்கு, காது பகுதியையும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

10. மாத்திரைகள் - ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களுக்கான மாத்திரை மருந்துகளை எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.