தூக்க பிரச்சினையால் அவதியுறும் பெண்களை தாக்க போகும் பிரச்சினைகள்

 
sleep

பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும். தூக்கம் குறையும்போது அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

தூக்கத்தை ஓய்வுக்கான ஒன்றாகத்தான் நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருப்போம். நிஜம் அதுவல்ல. நம் உடல் வளர்ச்சிக்குத் தூக்கம் மிகவும் முக்கியம். 'குழந்தை நல்லா தூங்கினால்தான் நல்லா வளரும்' என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். நம் உடலின் வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள் (Growth hormone) இரவில்தான் சுரக்கின்றன. இதன் காரணமாகவே 6-8 மணிநேரம் அவசியம் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம்.


ஒருவருக்கு 'தூக்கமின்மை பிரச்னை' ஏற்பட முக்கியக் காரணம் அவரின் வாழ்க்கைமுறைதான். சரியான உடல் இயக்கம் இல்லாமல் இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும்.

இரவு அதிக நேரம் டிவி, மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கமின்மை ஏற்படலாம். இரவு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிக காரம் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ செரிமானக்கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவற்றாலோகூட தூக்கமின்மை ஏற்படும்.


மனதில் எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு மனஅழுத்தம், மன உளைச்சலுடன் இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும். இவையெல்லாம் 'ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா' ஏற்பட முக்கியக் காரணங்கள்.


ரத்தச்சோகை, நீரிழிவு பிரச்னை, சிறுநீரகப் பாதிப்பு, மூட்டுவலி, முதுகுவலி , கைகால் வலி , முட்டிவலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' ஏற்பட்டு தூக்கமின்மை வரலாம்.

ஆஸ்துமா, மாரடைப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் மூச்சுத்திணறல் காரணமாகத் தூக்கமின்மை பிரச்னை ஏற்படலாம்.

சிலர் தங்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் காரணமாகவும் தூக்கப் பிரச்னைகளுக்கு உள்ளாகலாம்.

அன்ரெஃப்ரெஷிங் ஸ்லீப் பிரச்னை ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் 'குறட்டை'. தூங்கும்போது குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு எவ்வளவுதான் தூங்கினாலும் காலையில் எழுந்தால் புத்துணர்வாக இருக்காது. குறட்டைவிடும்போது போதுமான அளவு ஆக்சிஜன் நம் உடலுக்குக் கிடைக்காது. இதனால் அன்ரெஃப்ரெஷிங் ஸ்லீப் ஏற்படுகிறது.

இந்த லாக்டௌனில் பலருக்குத் தூக்கமின்மை பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இதற்கு முக்கியக் காரணம் நாம் வீட்டிலேயே இருப்பதால் அதிக உடலியக்கம் எதுவும் இல்லாமல் இருப்போம். உடற்பயிற்சி, உடல் அசைவுகள் எதுவும் பெரிதாக இல்லாத பட்சத்தில் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.


அடுத்ததாக நம் உடலினுள் உறுப்புகளின் இயக்கங்கள் சரிவர நடக்க நம் உடலில் சூரியஒளி பட வேண்டியது அவசியம். இப்போது நாம் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் இது தடைப்படுகிறது. இதனாலும் தூக்கமின்மை ஏற்படலாம்.

Sleep

ஆழ்ந்து தூங்காத பெண்கள் உற்சாகமின்றி செயல்படுவார்கள். காரணமில்லாமல் கோபப்படுவார்கள். எரிச்சலான மனநிலையிலேயே மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். அவர்களது மனநிலையும் குழப்பமாக இருந்துகொண்டிருக்கும்.

போதுமான நேரம் தூங்காதவர்கள் கண் எரிச்சல், தலைவலியால் அவதிப்படுவார்கள். சரியான தூக்கம் இல்லாதது தலை வலிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் சரியான தூக்கம் இன்றி சிரமப்படுவார்கள். அவர்கள் குழந்தைகள் நலனில் காட்டும் அக்கறை போலவே தங்கள் உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். போதிய நேரம் தூங்க வேண்டியது அவசியம். குழந்தைகள் தூங்கும் வேளையில் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு குடும்பத்தினர், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என மனதை இலகுவாக்கிக்கொள்ள வேண்டும்.

காலையில் தினமும் நடைப்பயிற்சி அவசியம். அது சீரான தூக்கத்திற்கு துணைபுரியும். சிலர் காலையில் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று இரவில் உடற்பயிற்சி செய்வார்கள். இது தவறான பழக்கம். தூக்கமின்மை பிரச்சினைக்கு இரவு நேர உடற்பயிற்சியும் முக்கிய காரணம். தொடர்ந்து சரியான தூக்கமில்லாமல் அவதிப்படும் பெண்களுக்கு நீரிழிவு, இதய நோய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தூக்கமின்மை பிரச்சினை உடையவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். அதில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இரவில் ஆழ்ந்து தூங்க விரும்புகிறவர்கள் மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதை தவிர்ப்பது அவசியம். மனக்கவலைகளை ஒதுக்கிவைக்கவேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகளை செய்வதையும் தவிர்த்திடவேண்டும்.

நாம் ஒருநாள் இரவு தூங்கவில்லை என்றாலே மறுநாள் காலையில் தலைவலி, கண்ணெரிச்சல், அசதி, கோபம், வேலையில் கவனச்சிதறல் எல்லாம் ஏற்படும்.

இன்சோம்னியா பிரச்னை உள்ளவர்களுக்கு மேற்கூறிய பாதிப்புகள் எல்லாம் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். அதீத மனஉளைச்சல், தலைவலிக்கு ஆளாவார்கள்.

தொடர்ச்சியாகத் தூக்கப் பிரச்னை இருந்து அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விடும்போது நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, பக்கவாதம் போன்ற மற்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படலாம்.