உட்கார்ந்த இடத்திலே சம்பாதிக்கிறவங்க வீட்ல, எமன் வந்து உட்காராமலிருக்க உதவும் குறிப்புகள் .

 
sitting

மருத்துவப் பத்திரிகை ஒன்றின் ஆய்வு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்தபடிப் பணிபுரியும் நபர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் 34 சதவிகிதம் அதிகம் என்கிறது. அமர்ந்து கொண்டே பணிபுரியும் வாழ்க்கை, உங்களைப் பலவித நோய்களின் கிடங்காக மாற்றிவிடும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.டெஸ்க் டெர்ரீர்’ எனப்படும் இந்த பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.

அவர்கள், அதிக நேரம் இருக்கையில் அசையாமல் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் பின்புறத்தை ஸ்கேன் செய்தார்கள். அப்போது, அவர்களின் ஆசனப் பகுதி தசைகள் சுருங்கியும், சேதமடைந்தும் இருப்பது தெரியவந்தது. அதிக நேரம் அமர்ந்து, அலட்டிக்கொள்ளாமல் வேலை பார்ப்பவர்களின் பின்புறத்தில் கொழுப்பு சேர்கிறது, அது தசை திசுக்களுக்கு உள்ளும் ஊடுருவுகிறது.

இதுதொடர்பாக நுபீல்டு ஆரோக்கிய மையத்தின் பிசியாலஜி துறைத் தலைவர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகையில், “ஒருவர் நாள் முழுவதும் இருக்கையில் அமர்ந்திருந்தால், அவருடைய இடுப்பின் முன்புறத் தசைகள் அளவுக்கு அதிகமாகச் செயல்படும். அந்த தசைகள் இறுக்கமாகவும் ஆகின்றன.

அதன் விளைவாக, குறிப்பிட்ட நபர்களின் பின்புறத்தில் அந்த வடிவத்தைக் கொடுக்கும் மூன்று முக்கியத் தசைகளான குளூட்டியஸ் மாக்சிமஸ், குளூட்டியஸ் மீடியஸ், குளூட்டியஸ் மினிமஸ் ஆகியவை பாதிக்கப்படுகின்றன“ என்கிறார்.

ஆண்களுக்குப் பெரும்பாலும் இடுப்பைச் சுற்றி கொழுப்புச் சேர்கிறது என்றால், பெண்களுக்குப் பெரும்பாலும் பின்புறத்தில் கொழுப்பு திரள்கிறது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ்.

இந்தப் பாதிப்புகளைத் தடுக்கவே கீழ்க்கண்ட வழிமுறைகள் சொல்லப்படுகின்றன.

நீண்ட நேரம் ஒரே நிலையில் உங்களைக் குறுக்கிக் கொண்டு அமராதீர்கள். அவ்வப்போது அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உங்கள் கைகால்களை அசைத்து எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இவை உங்களை நிச்சயமாக சுறுசுறுப்பாக வைக்க உதவும்.

ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரியும்போது உங்கள் மூளையும் சோர்வடைந்து போகிறது. இதைத் தவிர்க்க சீரான இடைவெளியில் நீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

உங்கள் கணினியின் திரையை விட்டு, அவ்வப்போது கண்கள் விலகி இருக்கட்டும். உங்கள் பார்வையைவிடத் தாழ்வாகவே கணினியின் திரை இருக்கட்டும். 90 டிகிரி என்ற அளவில் உங்கள் கரங்கள் நேராக விசைப்பலகையின்மீது இருக்கட்டும்.

அவ்வப்போது சிறிதுநேரம் நின்றுகொண்டே வேலை பாருங்கள். நின்றுகொண்டே வேலை செய்யும்போது, ஒரு மணி நேரத்துக்கு சுமார் 50 கலோரிகள் வரை அதிகமாகச் செலவாகிறது.

நெருக்கமான சூழலில் பணியாற்றும்போது அதிகச் சோர்வை அடைவீர்கள். எனவே அடிக்கடி உங்கள் பாதங்களையும் கரங்களையும் தட்டுவதன்மூலம் அதிக உற்சாகத்தைப் பெறலாம். அடிக்கடி ஆழ்ந்து சுவாசிப்பதன்மூலம் உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் அதிகப்படியான ஆற்றலைப் பெறுகிறீர்கள். அளவுக்கு மிஞ்சிய கலோரிகள் எரிக்கப்பட்டு, உங்கள் மூளையின் செயல்பாடு அதிகரித்துச் சுறுசுறுப்பாக மாறுவதை உணரமுடியும்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை சிறிது தூரம் நடந்து விட்டு வாருங்கள். கைப்பேசியில் பேசும் போதெல்லாம் நடந்தவாறே பேசுங்கள்

தினமும் எவ்வளவு நேரம் நீங்கள் உட்கார்ந்தபடி வேலை செய்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். தொடர்ந்து எட்டு மணி நேரம் வரை நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு எழாமல் ஒரே இடத்தில் இருந்தால் நீங்கள் அமர்ந்திருத்தல் நோய்க்கு ஆளாக நேரிடலாம். அப்படியென்றால் என்ன தொடர்ந்து படியுங்கள்.

ஒரே இடத்தில் பல மணி நேரம் வரை உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்துகொண்டே இருப்பவர்களுக்கு தான் இந்த நோய் என்கிறோம். இது நாள் முழுக்க ஒரே இடத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டீவி பார்த்துகொண்டே இருப்பது படுக்கையிலேயே காலத்தை கழிப்பது என எல்லாமே உட்கார்ந்திருத்தல் என்னும் நோய் தான்.


ஓய்வாக பொழுதை கழிக்க நினைக்கும் பலரும் டீவி முன்பு நேரத்தை செலவிடுவது வழக்கம் என்றாலும் அந்த நேரத்திலும் சில உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். ட்ரெட் மில்லில் பயிற்சி செய்தபடி பார்க்கலாம். அப்படி எதுவுமே இல்லையென்றாலும் கால்களை மடக்கி கீழே சம்மணமிட்டு உட்கார்ந்தபடி உள்ளங்கை விரல்கள், கால் விரல்களை இலேசாக அழுத்திவிடலாம்.

மசாஜ் செய்யலாம். நின்று நடனமாடலாம். கை கால்களை அசைக்கலாம். இடைவேளையில் எழுந்து வீடு முழுக்க நடக்கலாம். இவையெல்லாமே உட்கார்ந்திருத்தல் நோய் தீவிரத்தை குறைக்க செய்யும்.

மூன்றூ வேளை உணவுக்கு ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணீ நேரம் உட்கார்ந்தபடி தான் சாப்பிடுகிறோம். அலுவலக பணியிலும் உட்கார்ந்த இடத்தில் தான் வேலை நடக்கிறது. அதன் பிறகு வீட்டிற்கு வந்தாலும் சோர்வு என்று சோபாவில் அமர்ந்தபடி டிவி பார்க்கிறோம். பிறகு படுக்கை என்று கழியும் வாழ்க்கையில் உடல் உழைப்புக்கு நேரமே இருப்பதில்லை.

ஆனால் உடல்பயிற்சி செய்கிறோமே என்று சொல்பவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள்சொல்வது அது கணக்கில் எடுக்கப்படாது என்பது தான். ஒரு மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்வதை காட்டிலும் உடல் இயக்கம் நாள் முழுக்க இருந்தாலே போதும் என்கிறது நவீன ஆய்வுகள்.