ருசியான உணவு இருந்தும் பசி எடுக்காமலிருப்பதற்கான காரணமும் ,வழிகளும்
பொதுவாக உடலில் எரிபொருள் குறைவாக இயங்கும் போது பசி மற்றும் பசி உணர்வு உருவாகிறது. இது பசியின் அளவை கட்டுப்படுத்தும் விஷயம் மட்டும் கிடையாது. இரத்த சர்க்கரை அளவு குறைதல் அல்லது சில பசி ஹார்மோன்களின் அதிகரிப்பு போன்ற காரணிகளாலும் இது கட்டுப்படுத்தப்படுகிறது. மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் உங்கள் பசியையும் பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் சில பேருக்கு நீண்ட காலங்களாக பசி உணர்வு சரியாக இல்லாமல் இருக்கலாம். அப்படி பசியை உணராததற்கு சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இங்கே அறிந்து கொள்வோம்.
அதிக கலோரிகளுடன் சிறிய உணவு
உங்களுக்கு பசி இல்லை என்றால் உங்களை கட்டாயப்படுத்தி உண்ண வேண்டாம். அதற்கு பதிலாக, கலோரிகளால் நிரம்பிய சிறிய உணவை உண்ணுங்கள், இதனால் உங்கள் உடலின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
தினசரி வாழ்வில் நடக்கும் ஏதேனும் பிரச்சினையின் காரணமாக நாள் முழுவதும் நீங்கள் கவலையுடன் இருந்தால், கவலை உங்கள் பசி உணர்வைப் பாதிக்கும். இதனால் செரிமானம் சரியாக ஆகாமல் பசியைக் குறைக்கும் சில ஹார்மோன்களை வெளியாகக்கூடும். கவலையின் காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
மனச்சோர்வு ஏற்பட்டாலும் பசியின்மை பிரச்சினை இருக்கும். மனச்சோர்வு மூளையின் சில பகுதிகளை பாதிக்க வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் தான் மனக்கஷ்டத்துடன் இருக்கும் நிறைய பேருக்கு சரியாக பசி ஏற்படுவதில்லை.
உடல்நலக்குறைபாடு ஏற்பட்டிருக்கும் வேளையிலும் ஒரே இடத்திலேயே முடங்கி கிடந்தால் பசி உணர்வே ஏற்படாது. வயிறு முழுமையாக இருப்பது போலவே தோன்றும். காய்ச்சல், சளி மற்றும் வயிற்று நோய்த்தொற்றுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் பசியின்மைக்கு காரணமாகும். சுவாசம் சம்பந்தமான உடல்நல குறைபாடுகள் ஏற்படும்போது வாசனை உணர்வு தடைபடும். இதனால் உணவை விரும்பி சாப்பிடமுடியாது.
பசியின்மை மற்றும் சில உணவுகளின் மீது வெறுப்பு போன்ற பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. குமட்டல் மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் பசி உணர்வைத் தடுக்க கூடும்.
ஆன்டிபயாடிக் மருந்து மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டாலும் பசி உணர்வு என்பது ஏற்படாது.
![]()
இது போன்ற சமயத்தில் பசி உணர்வைத் தூண்டவும் நன்கு சாப்பிடவும் என்னென்ன செய்யலாம்.
நல்ல மனமுள்ள ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு கொத்தமல்லி, புதினா அல்லது மசாலா வாசனை பிடித்திருக்கும். அது போன்ற வாசனை நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளலாம்.
சில நேரங்களில் உங்களுக்கு பிடித்த உணவையே நாக்கு தேடும். ஆரோக்கியமாக இல்லையென்றாலும் பசி உணர்வைத் தூண்ட கொஞ்சம் உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளலாம்.
என்னதான் கவலை, மனக்கஷ்டமாக இருந்தாலும் சாப்பிடாமல் உடலை வருத்தக்கூடாது. சரியான நேரத்துக்கு சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இதனால் உங்கள் கவலைகளை சரிசெய்ய முடியும்..


