குண்டான சிறுவர்களை ஒல்லியாக்க சில கில்லியான ஐடியாக்கள்

 
Belly Fat

உடல் பருமன் சிலருக்கு பிரச்சனை என்றால் சிலருக்கு தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும். எத்தனை பேர் இவர்களைக் கிண்டல் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மாதிரியான கிண்டல் பேச்சுகளையும் கேலி பார்வைகளையும் எதிர்கொள்வது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

தினமும் கண்ணாடியில் பார்த்தாலும், திடீரென்று ஒருநாள் பொங்கி எழுவார்கள். இதோ ஆரம்பித்துவிட்டேன். எடு அந்த ஸ்போர்ட்ஸ் ஷூக்களையும் வெயிட் மெஷினையும்! எடை குறைப்புதான் அடுத்த டார்கெட். முதல் சில நாட்கள் மும்முரமாக டயட், உடற்பயிற்சி என்று பின்பற்றுவார்கள். அதன் பின்னர் இந்த மும்முரம் நீடிப்பதில்லை.

ஆனால் மன உறுதியுடன் சரியான உணவு வகைகளைத் தேர்வு செய்து சாப்பிட்டு, உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தினால் உடல் எடையை சீராக்குவது சாத்தியம். உடல் எடையைக் குறைப்பதற்கான குறிப்புகள் இதோ உங்களுக்காக:

அதே சமயம் சில நேரங்களில் வளர்சிதை மாற்ற குறைபாடுகளால் கூட உடல் பருமன் கூடும் நிலை ஏற்படும்.

உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்

முதல்நிலைக் காரணங்களாக மூன்று முக்கிய காரணிகள் உடல் பருமன் நோய்க்கு வித்திடுவதாக அறியப்படுகிறது.

அவை உளவியல் காரணங்கள், மரபியல் காரணிகள், சமூக மற்றும் சுற்றுப்புற காரணிகள்.

அதிக அளவில் குழந்தைகள் உணவு எடுத்துக்கொண்டால் உடல் பலம் பெறும்; குழந்தைகள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில், பெற்றோர்கள் அளவுக்கு அதிகமான கலோரிகள் கொண்ட கொழுப்புகள் உள்ளிட்ட‌ உணவு வகைகளை திணிக்கின்றனர்.

இது தவறான‌ முறை ஆகும். மேலும் இது மிகவும் ஆபத்தானதும் கூட. இம்முறையை பெற்றோர்கள் கைவிட வேண்டும்.

சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளை கண்டறிந்து, வயதிற்கு ஏற்றாற் போல் குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் அளவை சரியான முறையில் கண்டறிந்து, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பெரும்பான்மையான உடல் பருமனைக் குறைக்கலாம் .

பெற்றோர்களில் ஒருவர் உடல் பருமனாக இருந்தாலும், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு போதிய உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகள் குறைந்து காணப்படுவதும் குழந்தைகளின் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

உலக சுகாதார நிறுவனமானது 5 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர்பருவத்தினர் ஒரு நாளைக்கு 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரமாவது உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இந்த ஒருமணி நேர உடற்பயிற்சி என்பது விளையாட்டுகளாலும் நீச்சல் மற்றும் வேறு சில நடவடிக்கைகளாலும் எளிதாக அமைந்து விடுகின்றது.

ஆனால் நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள் என்பது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதில் குடும்ப சூழ்நிலை மற்றும் சுற்றுப்புற காரணிகள் ஆகியவை தவிர்க்க முடியாத காரணங்களாக அமைந்து விடுகின்றன.

நகர்புறத்தில் வாழும் குழந்தைகளின் பெற்றோர்கள் இதை மிகவும் கவனத்தில் கொண்டு, குழந்தைகளின் உடல் செயல்பாடுகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமநிலைப் படுத்தப்படாத ஆரோக்கியமற்ற உணவு, சில நோய்களுக்கான சிகிச்சைக்கான மருந்துகளாலும் உடல்பருமன் ஏற்படலாம்.

முறைப்படுத்தப்படாத வாழ்க்கை முறை, தைராய்டு, பாராதைராய்டு குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, பசிமிகு நோய் ஆகியவற்றாலும் உடல் பருமன் ஏற்படலாம்.

உடல் பருமன் விளைவுகள்

குழந்தைகளின் உடல் பருமனை கவனிக்காமல் விட்டால், அவர்கள் வளர வளர, சுவாசப் பிரச்னைகள், குடல் இறக்க நோய், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கொழுப்பு சேருதல் மற்றும் இதய நோய்கள் ஆகியவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உடல் பருமனான குழந்தைகள் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திப்பதை விட, மன ரீதியான பிரச்சனைகளையும் சமூக பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கும் சூழ்நிலை உள்ளது.

உதாரணமாக தாழ்வு மனப்பான்மை, மற்ற சக குழ‌ந்தைகளுடன் விளையாடும்போது கிண்டல், கேலிக்கு ஆளாவதால் தனிமைப்படுத்தப்படும் நிலை ஆகியவை மிகுந்த மனஉளைச்சலையும், அவர்கள் வாழ்வியல் சூழ்நிலையில் மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்தும்.

பழச்சாறு வகைகள் மற்றும் குளிர் பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் .

துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குறைந்த அளவு புரதச்சத்து உள்ள உணவை உண்ண வேண்டும்.

குழந்தைகள் உணவு உண்ணும் போது அவர்களுக்கு போதுமான அளவு உண்ண அனுமதிக்க வேண்டும். முழுவதுமாக உண்ண பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது.

தினசரி உடல் செயல்களை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

குழந்தைகளை குறிப்பிட்ட நேரம் விளையாட அனுமதியுங்கள் .

குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி, கணிப்பொறி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில் நேரத்தை செலவழிக்க அனுமதிக்காதீர்கள் .

உடல் பருமன் ஏற்பட்டுள்ள குழந்தைகள் உடல் எடை குறைய முறையான, சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

பல்வேறு விளம்பரங்களைக் கண்டு, உடலுக்கு கேடு விளைவிக்கும் சிகிச்சையை மேற்கொள்வதை கவனமாக தவிர்க்க வேண்டும்.

முறைப்படுத்தப்பட்ட, சரியான கலோரி கொண்ட, சத்தான உணவு மற்றும் முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை குழந்தைகளின் உடல் எடையைக் குறைக்க உதவும்.