"மட்டனும் சிக்கனும் சீக்கிரம் ஜீரணிக்க மாட்டேங்குதே" ன்னு அவஸ்தைப்படுறங்களுக்கு உதவும் இந்த பொருள்

 
stomach

சீரான செரிமானம் என்பது இன்று பலருக்கும் சிக்கலாகவே இருக்கிறது. ஒவ்வொரு வேளை உணவையும் மிகுந்த எச்ச ரிக்கையோடு எடுத்துகொண்டாலும் சமயங்களில் வாயுத்தொல்லை, வயிற்றுவலி, நெஞ்செரிச்சல், புளிப்பான ஏப்பம், வயிறு எரிச்சல் என்று விடாமல் விரட்டுகிறது.

இவை அனைத்துக்கும் காரணம் செரிமானக் கோளாறுகள் தான். கடினமான உணவுகள் மட்டும் இல்லாமல் எளிமையான உணவுகளும் கூட சிலருக்கு செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். அதனால் இயன்ற அளவு உணவில் அதிக கவனம் செலுத்துவார்கள்.உணவை மென்று உமிழ்நீரோடு கலந்து நன்றாக மென்று சாப்பிட்டால் செரிமானமும் சீராகும்.
சாப்பிட்டதும் குளிர்ந்த நீர் குடித்தால் உணவிலிருக்கும் எண்ணெய்படலம் உடலில் செரிமானக்கோளாறு உண்டாக்கும்.

அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.

நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.

வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.

சோம்பு

பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.

இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.

இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.