மழைக்காலத்தில் கரண்ட் ஷாக் அடிச்சா ,உயிரை காப்பாற்ற உடனே இதை செய்யுங்க
அறிவியல் வளர்ச்சி விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்தாலும் இன்னும் சில பிரச்சினைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சியால் தீர்வு கண்டறிய இயலவில்லை. அதில் ஒன்றுதான் மின்சாரம் தாக்குவது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5000 இந்தியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு மின்சாரம் தாக்கிய ஒருவரை எப்படி காப்பாற்றுவது, என்ன முதலுதவிகள் செய்வது போன்ற விழிப்புணர்வு இல்லாததுதான். மின்சாரம் தாக்கியதும் தேவையான முதலுதவிகளை செய்தாலே பாதி உயிர் இழப்புகளை குறைத்துவிடலாம். இந்த பதிவில் மின்சாரம் தாக்கியவுடன் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னவென்பதை பார்க்கலாம்.
மின்சாரம் தாக்கிய ஒருவருக்கு மரணம் ஏற்பட நான்கு காரணங்கள் உள்ளது. எவ்வளவு வோல்ட் மின்சாரம் தாக்கியது, எதன் வழியாக மின்சாரம் தாக்கியது, மின்சாரம் தாக்கியவரின் ஆரோக்கியம் மற்றும் எவ்வளவு விரைவாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நான்கு காரணங்கள்தான் மின்சாரம் தாக்கியவரின் ஒருவரின் மரணத்தை நிர்ணயிக்கிறது.
மின்சாரம் தாக்கியவுடன் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக மாரடைப்பு, இதய துடிப்பு தொடர்பான பிரச்சினைகள், சுவாசிக்க சிரமப்படுதல், தசைகளில் வலி, உணர்வின்மை அதாவது உடல் மரத்து போதல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் தூக்கி செல்லுங்கள். இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். தாமதம் ஏற்பட்டால் மரணம் மட்டுமே நிகழும். மருத்துவ உதவி கிடைப்பதற்குள் உங்களால் இயன்ற முதலுதவிகளை செய்யுங்கள்.
வீட்டின் எல்லா பகுதிகளிலும் மின்சாரத்தில் இயங்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசிய தேவையில் நாம் இருக்கிறோம். கையில் ஏதேனும் ஈரம் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, சில சமயங்களில் நம்முடைய விரல்களில் உள்ள மின் காந்த சக்தியின் காரணமாக, எதிர்பாராமல் கரண்ட் ஷாக் அடிப்பதுண்டு.
அதுபோன்ற சமயங்களில் நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் அதை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். ஆனால் குளியல் அறை மற்றும் சமையல் அறை போன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும். ஏனெனில் ஈரத்தில் மின்சாரத்தின் திறன் மிக அதிகமாக இருக்கும். அதனால், மின்சார விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது நன்றாக யோசித்து, மின்னல் வேகத்தில் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.
![]()
மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் கையில் ரப்பர் கை உறையை அணிந்து கொண்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது ப்ளக் கட்டையை எடுத்து, மின் கம்பியைத் துண்டித்து மின் ஓட்டத்தை தடை செய்ய வேண்டும்.
உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. அதற்கு முதலில் மின் ஓட்டத்தை நிறுத்தி, பெரிய, ஈரமில்லாத காய்ந்துபோன மரக்கட்டை அல்லது கயறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித்துடிப்பை பரிசோதிக்க வேண்டும்.
இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயம் செயல்படத் தூண்ட வேண்டும். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுத்து, பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்
மின்சாரம் துண்டிக்கப்படும் வரை அதிக மின்சாரம் பாயும் வயர்களின் அருகே செல்லாமல் இருப்பது நல்லது. குறைந்தது 20 அடி தூரம் தள்ளி நிற்கவும். வயரில் இருந்து நெருப்பு பொறிகளோ அல்லது சத்தமோ வந்தால் அதன் அருகில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
மின்சாரம் தாக்கியதில் ஏதேனும் காயம் படாதவரை அவர்களை உடனடியாக நகர்த்தாதீர்கள். ஏனெனில் அவர்களின் உடல் உடனடி இயக்கங்களுக்கு தயாராக இருக்காது. அவ்வாறு உடனடியாக நகர்த்தும்போது அவர்களின் பாதிப்பு இருமடங்காக உயரும். அதேநேரம் காயம் இருந்தால் அதற்கு உடனடி முதலுதவி செய்ய வேண்டியது அவசியம்.


