இதயம் ஆபத்தில் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?

 
heart

இதய ரத்த நாளத்தில் ஏற்படும் பிரச்னைகள் ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன. நவீன தொழில்நுட்பம், மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்திலும் உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நிகழ்வதை காண்கிறோம். திடீர் இதயத் துடிப்பு முடக்கம், மாரடைப்பு போன்றவை திடீரென்று ஒரு நாளில் வந்துவிடுவது இல்லை. நான் அபாய கட்டத்தில் இருக்கிறேன் என்று இதயம் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அதை புரிந்துகொள்ளும் நிலையில் நாம் இல்லாததே உயிரிழப்பு ஏற்பட காரணம்.

இதய நோய்கள் ஏற்பட்டால் மன அழுத்தம், சோர்வு, ஒருவித படபடப்பு ஏற்படும். என்ன காரணம் என்று தெரியவில்லை மனப் பதற்றமாகவே இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். இந்த மன அழுத்தம் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படுவதை நம்மால் உணர முடியும். அப்படி உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும்.

சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தாடை, வலது கை, புஜம் போன்ற பகுதிகளில் வலி ஏற்படும். இதை சாதாரண கை வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி என்று பலரும் அலட்சியம் செய்துவிடுகின்றனர். வலியானது நெஞ்சு பகுதியில் ஏற்பட்டு கை, கழுத்து, தாடை வரை பரவும். இது மாரடைப்பின் அறிகுறியாகும். இவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம்.

பசியின்மை, குமட்டல், வயிற்று வலி, வாந்தி, செரிமானமின்மை போன்ற பிரச்னை இருந்தால் அதுவும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். சாதாரண வயிற்று பிரச்னை என்று இருந்துவிடாமல் எதனால் பிரச்னை வந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

அடிக்கடி மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு, தலைச்சுற்றல், உடல் சோர்வு, தள்ளாட்டம் இருந்தால் தாமதிக்கக் கூடாது. சிலருக்கு குளிராகவும் வியர்வை வழிந்தபடியும் இருக்கும். இதயம் சரியாக இயங்கி மூளைக்கு தேவையான ரத்தத்தை அனுப்பாத சூழலில் மயக்கம் ஏற்படும். எனவே, இதய நோய் சிகிச்சை நிபுணரை அணுகி இதயத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதே போல் பார்வை மங்குதல், பார்வைத் திறனில் திடீர் குறைபாடு ஏற்பட்டால், சருமத்தின் நிறம் வெளிறிப்போனால் இதய நோயாக இருக்கலாம். தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்.