டெல்டாவை முந்துகிறது ஒமிக்ரான்... ஆபத்து இல்லை என்று கூறும் நிபுணர்கள்!

 
Omicron

ஒமிக்ரான் வைரஸ் கடந்த 2021 நவம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு மிக வேகமாக உலக நாடுகளில் பரவியது. ஒமிக்ரான் மிகவும் சாதாரணமானதுதான். அதனால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை. மிக வேகமாகப் பரவும் தன்மை உடையதாக உள்ளதே தவிர அதனால் ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் கூறி வருகிறனர்.

டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் இது டெல்டா பாதிப்பை முந்திவிடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான், டெல்டாவை முந்தத் தொடங்கியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோயியல் நிபுணர் மரியான வான் கெர்கோவ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் மிக வேகமாகப் பரவினாலும் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அது மனித உடலில் இரட்டிப்பாகும் வேகம் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசி செயல்பாடும் குறைவாகவே உள்ளது. ஒமிக்ரான் டெல்டாவை விட வீரியம் குறைவானதுதான். இருப்பினும் ஆபத்து இல்லாதது என்று கூறிவிட முடியாது. இதன் காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது" என்றார்.

இதற்கிடையே டெல்டாவில் கொத்துக்குத்தாக உயிரிழப்பு நிகழ்ந்தது போன்ற கொடுமையான நாட்கள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 98 சதவிகிதம் பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற இதர பிரச்னை உள்ளவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. இந்த சூழலில் தடுப்பூசி போடாதவர்கள், வேறு சில நோய் உள்ளவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டால் அது அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மருத்துவமனையில் இடம் இல்லாத சூழலில் உயிரிழப்பைத் தவிர்ப்பது கடினமாக மாறிவிடலாம். அமெரிக்காவில் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். இதனால் மருத்துவமனைகள் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளன. இதன் காரணமாக வரும் நாட்களில் பழைய படி உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

வளர்ந்த நாடுகளிலேயே இதுதான் நிலை. நாம் இப்போதும் கூட விழித்துக்கொள்ளவில்லை என்றால் நிலைமை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று இந்திய மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்!