ஒமிக்ரான் வயிறு மண்டலத்தை பதம் பார்க்கலாம்... மருத்துவர் வழங்கும் எச்சரிக்கை!

 
Omicron

உங்களுக்கு காய்ச்சல் எதுவும் இன்றி திடீரென்று குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஏற்பட்டுள்ளதா... அது ஒமிக்ரானின் கைவரிசையாகவும் இருக்கலாம். கோவிட் 19 கண்டறியப்பட்ட பலருக்கு காய்ச்சல், சுவாச பிரச்னை ஏற்படாமல் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தினம் தினம் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிரிழப்புக்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பீதியைக் கிளப்புகின்றனர்.

புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் சுவாசப் பாதை பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பதில் வயிற்றுப் பிரச்னையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், போடாதவர்கள் என அனைவருக்கும் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கமாக கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், சுவை உணர்வு, மணம் ஆகியவை குறையும். சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்டு, உயிரிழப்பு கூட ஏற்படலாம். ஆனால், புதிய வகையில் இந்த அறிகுறிகள் காணப்படவில்லை. அதற்கு பதில் முதுகு வலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது என்று டெல்லியில் உள்ள ஃபேர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நுரையீரல் பிரிவு இயக்குநர் மனோஜ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அதிகப்படியான சளி போன்ற திரவம் உற்பத்திதான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட இந்த பிரச்னை காரணமாக மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு பரிசோதனை செய்து பார்க்கையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், பசியின்மை, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கொரோனாவா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காரமான உணவுகள், மது போன்றவற்றை எடுக்கக் கூடாது. அறிகுறிகள் மோசமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். நமக்குதான் காய்ச்சல் இல்லையே என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்" என்றார்.