உடல் பருமன் எதிர்ப்பு தினம்... சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை குண்டானவர்களுக்கு ஏற்படும் நோய்கள்!

 
Obesity

நம்முடைய உடலில் படியும் அதிகப்படியான கொழுப்பு காரணமாக ஏற்படும் பிரச்னையையே உடல் பருமன் என்று சொல்கிறோம். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இந்த பிரச்னை உள்ளது. இந்த கொரோனா காலத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு தனி நபரின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடை இருப்பதை பிஎம்ஐ என்ற அளவீட்டால் அளவிடுகின்றனர். 25க்கு மேல் இருந்தால் அதிகப்படியான உடல் எடை என்றும், 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்றும் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்துகிறது. இப்படி உடலில் படியும் அதிகப்படியான கொழுப்பு காரணமாக இதய நோய்கள், சர்க்கரை நோய், மூட்டுத் தொடர்பான நோய்கள், புற்றுநோய், குழந்தையின்மை என பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்.

உணவுக் குழாய், வயிறு, கணையம், பெருங்குடல், பிராஸ்டேட், பித்தப்பை, கர்ப்பப்பை, சினைப்பை, மார்பக புற்றுநோய் மற்றும் நிணநீர் மண்டல புற்றுநோய் ஏற்பட உடல் பருமனும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது நேரடியாகவே இதயத்தைப் பாதிப்படைய செய்கிறது. பிஎம்ஐ அதிகரிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, கொழுப்பு அளவு அதிகரிக்கிறது, நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு மற்றும் டிரைகிளசரைட் அளவு அதிகரிக்கிறது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, தசைகளில் வீக்கம் ஏற்படுகிறது. உடல் எடையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிட்டால் சர்க்கரை நோய், இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

சர்க்கரை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் சர்க்கரை நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் உடல் பருமனானவர்கள்தான். உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு அளவு அதிகரிப்பு காரணமாக இன்சுலின் செயல்திறன் குறைகிறது, இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது. உடல் எடையைக் குறைத்து, சரிவிகித உணவு உட்கொண்டாலே சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

உடல் பருமனாக இருப்பது கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் தீவிர பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு கூட அதிகமாக உள்ளது.