மலிவான புதினாவுக்குள் அடங்கிருக்கும் வலுவான ஆரோக்கிய நன்மைகள்

 
mint

இந்தியாவில் எளிதாக கிடைக்கும் ஒரு ஆரோக்கிய மூலிகைதான் புதினா. தினமும் பல்வேறு வகையில் நாம் புதினாவை பயன்படுத்தி வருகிறோம். அனைத்து பிரச்சனைகளுக்குமான பொதுவான ஒரு தீர்வாக புதினா உள்ளது. குளிர்ந்த காலங்களில் தொண்டைக்கு இதமளிக்கும் ஒரு சூடான பானமாக புதினா உள்ளது.

health
​புதினா

கோடைக்காலத்தில் இது குளிர்ந்த பானமாக அனைவராலும் குடிக்கப்படுகிறது. வயிறு கோளாறு, ஆற்றல் இழப்பு, மோசமான மனநிலை மற்றும் குளிர்நிலை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் மூலிகையாக புதினா உள்ளது. நிபுணர் ஒருவர் கூறும்போது புதினா நமது உடலுக்கு 16 வகைகளில் நன்மை பயக்கிறது என கூறியுள்ளார். அப்படி புதினாவால் ஏற்படும் பல ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

இதில் மிகஅதிகளவு இரும்புச்சத்து, செம்புச்சத்தையும், அதிகளவு மாங்கனீசு, பொட்டாசியத்தையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன.

இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகியவையும் காணப்படுகின்றன.

புதினாவின் மருத்துவப் பண்புகள்

ஆரோக்கியமான செரிமானத்திற்கு

இது பசியுணர்வினை உண்டாக்குகிறது. இதனை வாயில் போட்டு உண்ணும் போது உண்டாகும் புத்துணர்ச்சி மற்றும் நறுமணத்தால் உமிழ்நீர் மற்றும் செரிமான நொதிகள் நன்றாக சுரக்கப்பட்டு உணவு நன்கு சீரனமாகிறது.

புதினாவில் கார்வோன் என்ற செயல் பொருள் ஒன்று உள்ளது. கார்வோன் குடலின் மெல்லிய தசைகளில் பிடிப்பு ஏற்படாமலும், பிடிப்பு ஏற்படின் அதனைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும் புதினாவில் உள்ள மெந்தால் செரிமான மண்டலத்தில் உண்டாகும் வயிற்றுப்போக்கு, வாயு தொந்தரவு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இதனை அடிக்கடி அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நினைவாற்றல் அதிகரிக்க

புதினாவில் உள்ள பாலிபீனாலான ரோஸ்மரினிக் அமிலம் வயதானவர்களின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிப்பு, விழிப்புணர்வு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

வாயினை பராமரிக்க

புதினாவை வாயில் போட்டு மெல்லும் போது அது கிருமிநாசினியாக செயல்பட்டு வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

இது நாக்கு மற்றும் பற்களை சுத்தம் செய்வதோடு வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. ஆதலால்தான் மவுத்வாஷ், பற்பசை உள்ளிட்ட வாயினை சுத்தம் செய்யும் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது.

ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு இதனை அடிக்கடி வாயில் போட்டு மெல்லலாம்.

தலைவலிக்கு நிவாரணம் பெற

தலைவலி தைலத்துடன் புதினாயிலைச் சாறு, புதினா எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமாகும். இதனை ஆய்வு முடிவுகளும் உறுதி செய்கின்றன. எனவே இது தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியைக் குறைக்கும் இயற்கை நிவாரணியாக உள்ளது.

மனஅழுத்தத்தைக் குறைக்க

இதில் உள்ள மெந்தால் மூளை மற்றும் நரம்புகளில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கிறது. புதினாவின் நறுமணத்தை நுகரும் போது மனசாந்தி கிடைக்கிறது.

இதனை உண்ணும்போது உண்டாகும் வாசனையால் மந்தம், பதட்டம், மனசோர்வு ஆகியவை நீங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனஅழுத்தம் குறைத்து ஆழ்ந்த உறக்கம் கிடைக்க புதினா எண்ணெயை தலையணையில் தோய்த்து அதில் சாய்ந்து உறங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

குமட்டலுக்கு தீர்வு காண

குமட்டல் மற்றும் தலைவலிக்கு புதினாவானது உடனடியாக தீர்வளிக்கிறது.

குமட்டல் உணர்வு தோன்றும் போது புதினாயிலைகளை பிய்த்து கையில் கசக்கி நுகரும் போது புதினாவின் நறுமணம் உள்ளே சென்று புத்துணர்ச்சியை உண்டாக்கி குமட்டலுக்கு தீர்வளிக்கிறது.

பயணத்தின்போது குமட்டல் ஏற்பட்டால் உடனடியாக புதினாவை நசுக்கி நுகர்ந்து தீர்வினைப் பெறலாம்.

சுவாசக் கோளாறுகள் நீங்க

புதினாவில் உள்ள மெந்தால் மூக்கடைப்பினை நீங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஜலதோசம், ஆஸ்துமா ஆகியவற்றால் தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் உண்டாகும் சுவாசக் கோளாறுகளை நீக்கி அவை நன்கு செயல்பட புதினா உதவுகிறது.

இது நாள்பட்ட இருமலால் தொண்டை, மூக்கு உள்ளிட்ட சுவாசப் பாதைகளில் உண்டாகும் எரிச்சலை போக்க உதவுகிறது. ஆதலால்தான் இருமல் டானிக்குகளில் புதினாவானது சேர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது.

சரும பராமரிப்பிற்கு

புதினா எண்ணெய் ஆன்டிசெப்டிக் மற்றும் அரிப்பு நீக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் இது தோலில் நோய் தொற்று மற்றும் நமச்சலை நீக்கி தோல் சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது.

முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் வடுக்களை நீக்கவும் இது உதவுகிறது. மேலும் குளவிகள், தேனீக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் விஷக்கொடுக்குகள் தாக்குதலால் தோலில் உண்டாகும் எரிச்சல் மற்றும் நமச்சலை சீர்செய்ய புதினா இலைச்சாறு உதவுகிறது.

ஆரோக்கிய எடை இழப்பிற்கு

புதினாவில் உள்ள மெந்தால் செரிமான சுரப்புகளைத் தூண்டி செரிமானம் நன்கு நடைபெறச் செய்வதோடு உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும், கொழுப்பினை முழுவதும் எரித்து ஆற்றலினை பெறவும் உதவுகிறது. எனவே ஆரோக்கிய உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.