மனைவியை விட மேனேஜர் டார்ச்சர் தான் அதிகம்.. மன அழுத்தத்தால் புலம்பும் ஊழியர்கள் - ஆய்வறிக்கையில் தகவல்..

அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மன ஆரோக்கியத்தில் அவர்களது மனைவி, மருத்துவர்களை விட மேலாளர்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மில்லினியல் மற்றும் GenZ ஊழியர்கள் மன ஆரோக்கியத்தை முதன்மையாக கருதுவதால், அவர்களது பணிச்சூழல் மற்றும் மன அழுத்தத்தில் மேலாளர்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள தி வொர்க்ஃபோர்ஸ் இன்ஸ்டிடியூட், ஆய்வு பணிகளை செய்து இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. மொத்தம் 10 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள 60% ஊழியர்கள் தங்கள் மனநலத்தை பாதிக்கும் மிகப்பெரிய காரணி வேலை என்று நினைக்கிறார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள், அதிக ஊதியம் பெறும் வேலையை விட மன நலத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பணியை தேர்வு செய்வதாகவும், அதற்காக ஊதியக் குறைப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், “தங்களது மனைவியை போல மேலாளர்கள் மன ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக (இருவரும் 69%) ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர் (51%) அல்லது சிகிச்சையாளரை (41%) விட மேலாளர் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகளவில் 40% சி-லெவல் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள், அடுத்த 12 மாதங்களில் வேலையில் உள்ள மன அழுத்தம் காரணமாக வேலையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐந்தில் ஒரு ஊழியர் தங்களது மன ஆரோக்கியத்தில், வேலை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதுகின்றனர். பெண் ஊழியர்களை பொறுத்தவரை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது.
வார இறுதி நாளில் 43% பணியாளர்கள் சோர்வடைந்து விடுவதாகவும், மேலும் 78% பேருக்கு மன அழுத்தம் அவர்களது வேலையை எதிர்மறையாக பாதிப்பதாகவும் கூறுகின்றனர். வேலையினால் ஏற்படும் மன அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையை வெகுவாக பாதிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களின் இல்லற வாழ்க்கை 71% , நல்வாழ்வை 64% மற்றும் உறவுகளை 62% எதிர்மறையாக பாதிக்கிறதாம்.
அதேநேரம் வேலையில் மன அழுத்தம் இருந்தாலும் 40% பேர் அதுகுறித்து தங்களது மேலாளரிடம் ( Manager)பேசுவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அப்படியே சொன்னாலும் "எனது அதுகுறித்து மேலாளர் கவலைப்படமாட்டார்" (16%) என்றும், "எனது மேலாளர் மிகவும் பிஸியாக இருக்கிறார்" (13%) என்று சிலர் தெரிவித்திருக்கிறனர். மற்றவர்கள் தங்களாகவே "அதைக் கண்டுபிடித்து சரிசெய்ய முடியும்" 20% என்று நினைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலாளர்களால் பணியாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை இது வரை பார்த்தோம்.. அப்போ மேலாளர்களின் நிலைமை என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?? ஆம் மன அழுத்தத்தில் இருந்து மேலாளர்களும் தப்பிவிடவில்லை. அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் பாதி மேலாளர்கள் (57%) “இந்த வேலையை ( தற்போதைய மேனேஜர் பணி) எடுக்க வேண்டாம் என்று முன்கூட்டியே யாராவது எச்சரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் மேனேஜர் பணியில் அதி மன அழுத்தத்தை அனுபவிப்பதால், அடுத்த 12 மாதங்களுக்குள்( ஓராண்டுக்குள்) அவர்கள் (46% பேர்) வேலையை விட்டுவிடுவார்கள் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.