உடலுறுப்புகளை உறுதியாக்கும் கருப்பட்டி பொங்கல் செஞ்சி இந்த பொங்கலை கொண்டாடுங்க

 
pongal

 

கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள்.

மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர். அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. அதுபோல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

 
நாம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் மக்களிடம் கருப்பட்டி பயன்பாடு அதிகரித்து உள்ளதன் காரணமாக அது குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

சுக்குக் கருப்பட்டி உடன் சீரகத்தைச் சேர்த்து சாப்பிடலாம். இது நன்கு பசி எடுக்க உதவும். வாயுத்தொல்லை நீங்க கருப்பட்டி உடன் ஓமத்தை சேர்த்து சாப்பிடலாம்.

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்

 

குப்பை மேனிக் கீரை உடன், கருப்பட்டி சேர்த்து வதக்க வேண்டும். இதனைச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகிறது. கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சுத்தம் செய்ய உதவும். கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து, சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்க, காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டி போட்டுக் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஆண்மையை வீரியப்படுத்துவதில் கருப்பட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

பொங்கள் பண்டிகை முன்னிட்டு எப்படி கருப்பட்டி பொங்கல் செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் - 1 கப்

பச்சரிசி - 1 கப்

பால் - 3 கப்

தண்ணீர் - 3 கப்

நெய் - அரை கப்

சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்

முந்திரி - தேவைக்கு

உலர் திராட்சை - தேவைக்கு

செய்முறை

அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

 

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும். மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். அடுத்து அதில் சுக்குத்தூள் சேர்க்கவும்.

எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.