இந்துப்பு எனப்படும் பிங்க் உப்பு ரொம்ப நல்லதா?

இன்றைக்கு கடல் உப்பு கெடுதல் என்று கூறிக்கொண்டு பலரும் இந்துப்பு, ஹிமாலயன் சால்ட் எனப்படும் பிங்க் உப்புக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இது அதிக ஊட்டச்சத்து கொண்டது, உடலுக்கு நல்லது என்று எல்லாம் சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் அது நல்லதா, அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாமா என்று பார்ப்போம்.
ஹிமாலயன் சால்ட் எனப்படுவது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இமயமலைப் பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகையான உப்பாகும். பொதுவாக உப்பு என்பது சோடியம் குளோரைட்டால் ஆனது. சமையல் உப்பில் 98 சதவிகிதம் சோடியம் குளோரைடுதான் இருக்கும். இந்துப்பிலும் அதிக அளவில் சோடியம் குளோரைடுதான் உள்ளது. இருப்பினும் பல லட்சம் ஆண்டுகளாக இயற்கையாக பாதுகாக்கப்பட்டு வரும் உப்பில் கூடுதலாக சில ஊட்டச்சத்துக்களும் இடம் பெற்றுள்ளன. இந்துப்பில் 84 விதமான தாது உப்புக்கள் உள்ளதாக வகைப்படுத்தியுள்ளனர்.
100 கிராம் சாதாரண உப்பில் 0.4 மி.கி கால்சியமும், இந்துப்பில் 1.6 கிராம் கால்சியமும் உள்ளது. சோடியம் சாதாரண உப்பில் 381 மி.கி-வும் இந்துப்பில் 368 மி.கி-மும் உள்ளது. சாதாரண உப்பைக் காட்டிலும் இந்துப்பில் கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம், இரும்பு உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும் இவை மிகமிகக் குறைவுதான்.
எனவே, இந்துப்பைத் தாராளமாக சமையலில் பயன்படுத்தலாம்.
பல தாது உப்புக்கள், ஊட்டச்சத்து மிக்கது என்பதற்காக அதை அதிகம் பயன்படுத்தக் கூடாது. அதிகம் பயன்படுத்தினால் அதுவே உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடலாம்.
இந்துப்பு செரிமானத்துக்கு மிகவும் நல்லது. உமிழ் நீர் முதல் செரிமானத்துக்குத் தேவையான முக்கிய நொதிகள் சுரப்பு வரை பல்வேறு சுரப்புகளைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்குகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, ஹார்மோன் சுரப்பை தூண்டுவது என்று பல வகைகளில் இந்துப்பு துணையாக இருக்கிறது. அதற்காக அதை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நாள்பட்ட சளி, புற்றுநோய் போன்ற நோய்களைத் தள்ளிப்போட இந்துப்பு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படுகிறது. இந்துப்புவை குளிக்க பயன்படுத்தலாம். தண்ணீரில் கலந்து குளிக்கும் போது சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, இளஞ்சிவப்பு நிறங்களிலும் இந்துப்பு கிடைக்கிறது. இதிலுள்ள மாசு மற்றும் தாது உப்புகளின் காரணமாக இந்த நிற மாறுபாடுகள் உள்ளது. ஊதா, மஞ்சள் நிறத்தைக் காட்டிலும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற இந்துப்பை உபயோகிப்பது நல்லது.
உப்பு என்றாலே உடலுக்கு கெடுதல்தான். எனவே, எந்த உப்பாக இருந்தாலும் சரி குறைத்துக்கொள்வது நல்லது!

