அதிகரிக்கும் புதிய வேரியண்ட் பாதிப்பு... மாஸ் முக்கியம் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

 
உயிருக்கு ஆபத்தானதா? COVID-19க்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புதிய நோய் MIS-C

கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில், கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் கவனக் குறைவு அதிகரித்துக்கொண்டே செல்வது, அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள் அதிக அளவில் கூடுவது, மாஸ்க் அணியாமை, சமூக இடைவெளியை பராமரிக்காதது போன்ற செயல்கள் மூன்றாவது அலையை ஏற்படுத்திவிடலாம் என்று எச்சரிக்கின்றனர்.

இந்த சூழலில் முகக் கவசம் அணிவது கொரோனா தொற்றில் இருந்து 50 சதவிகிதம் அளவுக்கு பாதுகாக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட எட்டு ஆய்வுகளின் அறிக்கைகள் வெளியாகி உள்ளது. அதில் முகக் கவசம் அணிவது கொரோனா பரவலை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்கிறது. இதனுடன் அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை கூடுதலாக 25 சதவிகிதம் அளவுக்கு கொரோனா பரவலிலிருந்து காப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், "கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசியை மட்டும் நம்பியிருப்பது சரியானதாக இருக்காது. பொது சுகாதாரத்தை பராமரிப்பது, முகக் கவசம் அணிவது போன்ற செயல்பாடுகள் கொரோனா பரவலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை பரவல் இருக்காது என்ற அலட்சியம் அனைவருக்கும் உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜம்மு காஷ்மீர் ஆகிய ஐந்து மாநிலங்களில் புதிய வேரியன்ட் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்னும் பல கோடி பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்படவில்லை. 11 கோடிக்கும் அதிகமானோர் 2ம் டோஸ் கொரோனா தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் நம்மை நாமே காத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு முகக் கவசம் அணிவது, அதிக கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்ப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடவடிக்கை மூலம் கொரோனா பரவலைத் தடுக்கலாம்!