ஒவ்வொரு பெண்ணும் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசி!

 
HPV vaccine

வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலகில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பது எல்லாம் சாத்தியமா என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். ஆம், ஒவ்வொரு பெண்ணும் திருமணத்துக்கு முன்பாக கர்ப்பப்பை வாய் தடுப்பூசியை போட்டுக்கொள்வதன் மூலம் இலக்கை அடைவது சாத்தியம்தான்.

ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) என்ற கிருமி காரணமாகவே பெரும்பான்மையான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க உலகம் முழுக்க எச்.பி.வி தடுப்பூசி உள்ளது. இதை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் போட்டுக்கொள்ளலாம். ஏனெனில் ஆணிடம் இருந்து தாம்பத்திய உறவின் மூலம் பெண்ணுக்கு இந்த வைரஸ் கடத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கு கடத்துவதைத் தவிர்க்கலாம். பெண் திருமணத்துக்கு முன்பே இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதன் மூலம் ஆணிடமிருந்து வந்தாலும் நம்முடைய உடலே வைரஸ் கிருமியை அழித்துவிடும் என்பதால் கவலையில்லை.

ஆண், பெண் என இருபாலருக்கும் 11, 12 வயதிலேயே இந்த தடுப்பூசியை போட்டுவிட வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் ஆவதற்கு முன்பு, அதாவது தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்பாகவே இந்த தடுப்பூசியை போட்டுவிட வேண்டும். தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு, ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டது என்றால், அதன் பிறகு போட்டுக்கொள்ளும் தடுப்பூசியால் ஒரு பயனும் இல்லை. எனவே, தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்கு முன்பு இளம் வயதிலேயே இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக 11 வயதில் முதல் டோஸ், 12வது வயதில் 2வது டோஸ் போட்டுக்கொள்ளலாம். ஒரு தடுப்பூசிக்கும் அடுத்த தடுப்பூசிக்கும் இடையே ஆறு மாத இடைவெளி வேண்டும். 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும்போது அது அதிக ஆற்றலுடன் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போன்று 26 வயதுக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தடுப்பூசி அந்த அளவுக்கு பலன் அளிப்பது இல்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அதற்காக தடுப்பூசி போடுவதைத் தவிர்க்க வேண்டாம். மகளிர் - மகப்பேறு மருத்துவர் ஆலோசனை பெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தாம்பத்திய உறவு மூலம் பெண்ணின் உடலுக்குள் நுழையும் வைரஸ் கிருமி, கர்ப்பப்பை புற்றுநோயை ஏற்படுத்த பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். எனவே, ஆண்டுக்கு ஒரு முறையாவது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.