சர்க்கரை நோய்க்கு மட்டும்தான் நாவல் கொட்டை நல்லதா?
நாவல் பழம் மட்டுமின்றி, நாவல் கொட்டையும் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படும். சித்த மருத்துவம் உள்ளிட்ட பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் நாவல் கொட்டையை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
நாவல் பழத்தில் ஜாம்போலின் மற்றும் ஜாம்போசின் என்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை கலப்பதைத் தாமதப்படுத்துகிறது. மேலும், இன்சுலின் சுரப்பைத் தூண்டி ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கச் செய்கிறது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்று மட்டுமே பலரும் நாவல் கொட்டையை பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோயாளிகள் தாண்டி பலரும் இதை பயன்படுத்தலாம். குறிப்பாக பிசிஓடி சீரற்ற மாதவிலக்கு பிரச்னை உள்ள பெண்கள் தினசரி ஒரு டீஸ்பூன் நாவல் கொட்டை பொடியைச் சாப்பிட்டு வரலாம். விரைப்புத் தன்மை பிரச்னை உள்ள ஆண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பாலியல் ஆர்வமின்மை பிரச்னை, குறைபாடு நீங்கும்.
பல்வேறு வயிறு - இரைப்பை தொடர்பான பிரச்னைகளை நீங்கும் தன்மை இதற்கு உள்ளது. நாவல் பழம் மற்றும் பொடியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவும். மேலும் குடலில் ஏற்பட்ட காயம், வீக்கம் போன்றவற்றை நாவல் குணப்படுத்தும்.
சர்க்கரை அளவை மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. இதில் உள்ள எலாஜிக் என்ற ஆன்டி ஆக்சிடண்ட் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுத்து கட்டுக்குள் வைக்கிறது. மேலும் இது ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நாவல் கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட், ஃபிளவனாய்டு உள்ளிட்டவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.
நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனையின்றி நாவல் பழத்தைச் சாப்பிட வேண்டாம்.
பால் அருந்திய பிறகு நாவல் பழம் சாப்பிடக் கூடாது. நாவல் பழத்தில் ஒருவித புளிப்புத்தன்மை உள்ளது. அது பாலை திரித்துவிடலாம். அதிக அளவில் நாவல் பழம் சாப்பிடுவது காய்ச்சல், உடல் வலி, தொண்டை பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, அளவோடு சாப்பிட்டு ஆலோக்கியமாக வாழுங்கள்!


