இதயத்தை வலிமையாக்கும் கொத்தமல்லி!

 
Coriander Coriander

நம்முடைய உணவில், சமையலில் தனியா தூள் மற்றும் கொத்தமல்லி இலைக்கு முக்கிய இடம் உள்ளது. அழகு, வாசனை, சுவைக்காக இவை சேர்க்கப்படுகின்றன என்று மட்டும் நினைக்க வேண்டாம்... அதனால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் அதிகம். சீரகம், மஞ்சள், பட்டை, மிளகு போன்று கொத்தமல்லியிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொத்தமல்லிக்கு உள்ளது. கொத்தமல்லி ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக உடலுக்கு கெடுதலான எல்டிஎல் கொழுப்பு அளவை இது குறைக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் அதிக அளவில் உள்ள சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்த பிரச்னை தவிர்க்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொத்தமல்லிக்கு உள்ளது. கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள இந்த காலகட்டத்தில் கொத்தமல்லியை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

Coriander

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கொத்தமல்லியைத் தினசரி சேர்த்துக்கொள்ளலாம். நம்முடைய செல்கள் குளுக்கோஸை பயன்படுத்தும் வகையில் என்சைம்களை கொத்தமல்லி தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக குறைகிறது.

இதில் வைட்டமின ஏ அதிகமாக உள்ளதால் பார்வைத் திறன் மேம்படவும் கொத்தமல்லி உதவுகிறது. வயோதிகம் காரணமாக ஏற்படக் கூடிய கண் பார்வைத் திறன் குறைபாடு பிரச்னைகளை கொத்தமல்லி தடுக்கிறது.

கொத்தமல்லி அல்லது தனியா விதை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. தனியாவை கொஞ்சம் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு குடித்து வந்தால், செரிமான பிரச்னைகள் நீங்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

வயோதிகம் காரணமாக மூளை செயல்களில் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பார்க்கின்சன், அல்சைமர் உள்ளிட்ட பல மறதி, நினைவாற்றல் குறைவு நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் ஆற்றல் கொத்தமல்லிக்கு உள்ளது. கொத்தமல்லி மூலை செல்களில் ஏற்படக் கூடி இழப்பு, பாதிப்புகளை கட்டுப்படுத்தி, நினைவாற்றலை மேம்படுத்தும் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.