எலும்புகளின் நண்பன் எந்த பழம்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

 
bone

ஒரு சில பழங்களையே எந்த வேளையிலும் சாப்பிட முடியும். அதில் நிறைய வைட்டமின் சத்துக்கள் நிரம்பியும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அருமையான ஒரு பழம் அன்னாசிப்பழம். பார்க்க கரடுமுரடாக இருக்கலாம். தோல் சீவி இதனை நறுக்குவதும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதன்பின் கிடைக்கும் பழம் சுவையானது மட்டுமல்ல, அளவில்லாத நற்குணங்களைக் கொண்டது.
பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.

அன்னாசிப்பழத்தின் சிறப்பு... 'ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. 'ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை 'ப்ரோமிலைனு'க்கு உண்டு.

அன்னாசிப் பழம் உடலுக்கு சூடு என்னும் நினைப்பில், இப்பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறியாதவர்கள், இப்பழத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை.

எலும்புகளின் நண்பன்

மூட்டுகளை அசைக்கும்போதும், உட்கார்ந்து எழும்போதும் ஏற்படும் மூட்டுவலி இரும்புச்சத்து குறைவால்தான் ஏற்படுகிறது.

அன்னாசிப்பழம் எலும்புகளை வலுப்படுத்தும் குணமுடையது. எலும்புகளையும், அதன் திசுக்களையும் வலுப்படுத்த மாங்கனீஸ் (Manganese) சத்து நம் உடலுக்கு தேவை.

ஒரு கப் அன்னாசிப்பழ ஜூஸ் அல்லது நறுக்கிய துண்டுகளில் அன்றாடத் தேவையான 73 சதவிகித மாங்கனீஸ் சத்து கிடைக்கிறது.

இளைஞர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், முதியவர்களின் எலும்பு வலுவிற்கும் இந்த மாங்கனீஸ் சத்து உதவுகிறது.

‘ஆர்த்ரைட்டீஸ்‘ எனச் சொல்லப்படும் மூட்டுவலிக்கு அன்னாசிப்பழம் அருமருந்து. மூட்டுவலி இல்லாதவர்களுக்கு அதிகப்படியான இரும்புச் சத்தை அளிப்பதன் மூலம் எலும்புகளைப் பலப்படுத்துவதில் அன்னாசிப்பழத்தின் பங்கு மகத்தானது.

எலும்புகளை மட்டுமின்றி அன்னாசிப்பழம் பல் ஈறுகளையும் வலுப்படுத்தி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

ஈறுகளில் தோன்றும் வியாதிகளுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இப்பழத்திலுள்ள வைட்டமின் ‘சி’ பெரிதும் துணைபுரிகிறது.

இதர பயன்கள்

ஜலதோசம், இருமலால் அவதியா? உணவில் அன்னாசிப்பழம் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. சைனஸ் மற்றும் தொண்டையில் தொந்தரவா? சளித்தொல்லையா? அனைத்தையும் இப்பழம் போக்கும்.

இப்பழத்தை ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக தொண்டை அறுவை சிகிச்சைக்கு முன்பு சாப்பிடச் சொல்கிறார்கள். அதனால் சைனஸ் தொல்லை குறைகிறதாம்.

ஆரஞ்சு ஜூஸில் அடங்கியுள்ள வைட்டமின் ‘சி’ அன்னாச்சிப் பழத்திலும் கிடைப்பதால் ஜலதோசம், இருமலுக்கு இப்பழம் உகந்தது.

அன்னாசிப்பழத்தில் உள்ள கந்தகச் சத்தில் ‘புரொட்டியோலிட்டிக்’ (Proteolytic Enzyme) என்னும் என்சைம் இருப்பதால் இப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, உணவில் உள்ள புரதத்தை நன்கு ஜீரணமடையச் செய்கிறது. மேலும் இது வீக்கத்தை கட்டுப்படுத்தும் இயற்கை நிவாரணியும்கூட.

அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது சாலச் சிறந்தது.

இதயத்திலிருந்து ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் ரத்த ஓட்டம் ஒரே சீராக இருக்க இப்பழத்திலுள்ள என்சைம் உதவுகிறது.

ரத்தம் உறைதலைத் தடுப்பதிலும், இக்குழாய்களில் ப்ளேக் நோய் பீடிக்காமல் தடுப்பதிலும் அன்னாசிப்பழம் உதவுகிறது.

தெளிவான கண் பார்வைக்கும், மிருதுவான சருமத்திற்கும் அன்னாசிப்பழம் மிகச் சிறந்தது.

இதிலுள்ள இயற்கையான பழச்சத்து மிகுந்த என்சைமும், அமிலமும் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

அன்னாசிப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ் கலவையுடன் கோதுமை மாவை சிறிது கலந்து பசைபோல் தயாரித்து முகத்திலும், கழுத்திலும் தொடர்ந்து தடவிவர, முகத்தில் புத்துணர்ச்சியைப் பெறலாம்.

அன்னாசிப்பழத்தின் மகத்துவத்தை அறிந்து அடிக்கடி அதை உட்கொண்டு நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்போம்.