டெங்கு அபாயம்... பிளேட்லெட்ஸ் அதிகரிக்க உதவும் உணவுகள்!
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் உள்ளது. சிலருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் பிளேட்லெட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடலாம். ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்தால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படலாம்.
பொதுவாக ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4 லட்சம் ரத்த தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை சில ஆயிரங்களாகக் குறைவதையே ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவு என்று சொல்கிறோம்.
ரத்த தட்டணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் பி12 எனப்படும் கோபாலமின் தேவை. நீரில் கரையக் கூடிய இந்த வைட்டமின் இறைச்சியில் அதிக அளவில் உள்ளது. ஒரு நாளைக்கு 2.4 மைக்ரோ கிராம் அளவுக்கு வைட்டமின் பி12 தேவை. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாருக்கு 2.8 மை.கி அளவுக்குத் தேவை. எனவே, முட்டை, இறைச்சி, கோழி, மீன் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இதே போன்று மற்றொரு பி காம்ப்ளெக்ஸ் வைட்டமினான ஃபோலேட் கூட ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. வைட்டமின் பி9, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இணைந்து புதிய செல்கள் உருவாக்கத்தைத் தூண்டுகின்றன. எனவே, நிலக்கடலை, ஆரஞ்சு பழம், கிட்னி பீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கவும் துணை செய்கிறது. பிளேட்லெட் உருவாகத் தேவையான மற்றொரு பொருளான இரும்புச் சத்தை கிரகித்து பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், பிரக்கோலி, குடைமிளகாய், கிவி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது.
ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. அப்போதுதான் உடல் முழுக்க போதுமான அளவு ஆக்சிஜன் கொண்டு போய் சேர்க்க முடியும். மேலும், இரும்புச் சத்து பிளேட்லெட்ஸ் உருவாகத் துணை செய்கிறது. பயிறு வகைகள், கீரை, பேரீச்சம் பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது.
பப்பாளி இலை, கொய்யா இலை கஷாயம் டெங்கு காய்ச்சலுக்கு எதிராக செயல்படும். பப்பாளியில் உள்ள பாப்பின் என்பது உள்ளிட்ட என்சைம் செரிமானத்தைத் தூண்டும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதே போல் மாதுளை ஜூஸ் பிளேட் லெட் எண்ணிக்கையை பராமரிக்க உதவும்.


