சாப்பிட்ட உடன் தூங்கினால் ஏற்படும் பிரச்னைகள் பற்றித் தெரியுமா?

 
Sleeping

இன்றைக்கு பெரும்பாலனவர்களுக்கு சாப்பிட நேரம் இன்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர். சாப்பிட்டு பல மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் வழக்கமாக பலருக்கும் உள்ளது. சாப்பிட்டதும் தூங்குபவர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், குழந்தைகளை இரவு சாப்பிட்ட உடன் தூங்க வைக்கும் பழக்கம் பெற்றோருக்கு உள்ளது. பொதுவாக சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம்.

சாப்பிட்ட உடன் நம்முடைய மூளையானது செரிமான மண்டலத்தைத் தூண்டி, செரிமான வேலையில் கவனம் செலுத்துகிறது. வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்கிறது. ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்பட்டு உடல் முழுவதும் கொண்டு செல்ல மூளை இப்படி செய்கிறது. இதனால் உடலின் மற்ற பகுதிகளுக்கான ரத்த ஓட்டம் குறைகிறது. மூளைக்கான ரத்த ஓட்டமும் குறைகிறது. இந்த சூழலில் சாப்பிட்ட உடனே தூங்குவதால் ஏற்படக் கூடிய பிரச்னைகள் என்ன என்று பார்ப்போம்...

சாப்பிட்ட உடனே தூங்கினால் உடலின் எடை அதிகரிக்கும். சாப்பிட்டதும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். உடல் விழிப்பு நிலையில் இருந்தால் உடலின் எல்லா உறுப்புக்களும் அதைப் பயன்படுத்தும். தூங்கச் செல்லும்போது எல்லா உறுப்புக்களும் பயன்படுத்தும் அளவு குறைந்துவிடும். இதனால், அதிக கலோரி செலவழிக்கப்படாமல் கொழுப்பாக மாற்றப்படும்.

தூங்கச் செல்வதன் மூலம் செரிமானம் தடைப்படும். இதன் காரணமாக எதுக்களிப்பு, நெஞ்சு எரிச்சல், உணவு செரியாமை, வாயுத் தொல்லை போன்றவை ஏற்படும்.

தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தால் அது ரத்த நாளங்களைப் பாதிப்படையச் செய்யும். இதன் காரணமாக பக்கவாதம் முதல் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

சாப்பிட்ட உடன் தூங்கச் செல்வது இரவு ஆழ்ந்த தூக்கம் வருவதைத் தடுத்துவிடும். உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இரைப்பையில் தங்கிவிட்டால் அசௌகரியம், எதுக்களிப்பு போன்ற பிரச்னை ஏற்படும். இதனால் தூக்கம் தடைப்படும்.

எனவே, சாப்பிட்டதும் துடிப்பாக நடைப்பயிற்சி, வீட்டு வேலை போன்றவற்றைச் செய்யுங்கள். இதன் மூலம் அதிக கலோரி எரிக்கப்படும். உடல் உழைப்பு அதிகரிப்பதால் தூக்கமும் நன்கு வரும். உடல்நலக் குறைபாடுகள் தவிர்க்கப்படும்.