கட்டி, வலி மட்டும்தான் மார்பக புற்றுநோய் அறிகுறியா?
உலகம் முழுவதும் ஒரு ஆண்டில் 23 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிய்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரம் கூறுகின்றது. மார்பக புற்றுநோயால் இந்தியாவிலும் அதிக அளவில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பிரச்னை வெளியே சொல்ல கூச்சப்பட்டு, உள்ளுக்குள்ளேயே வலி, வேதனையைத் தாங்கிக்கொண்டு கடைசியில் புற்றுநோய் மிகமோசமாக பரவிய நிலையில் மருத்துவ மனைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால் அதைக் குணப்படுத்த முடியும். உயிரையும் காப்பாற்றலாம்.
மார்பகத்தில் கட்டி, வலி ஏற்பட்டால் மட்டுமே புற்றுநோயாக இருக்கலாம் என்று சில பெண்கள் நினைகின்றனர். இது உண்மையில்லை. பெண்கள் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். மார்பகங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்றும் அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் இயல்புக்கு மாறான விஷயம் தென்பட்டால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. மார்பக புற்றுநோயாக இருக்கக் கூடிய சில அறிகுறிகளைப் பார்ப்போம்...
மார்பகம் முழுவதும் அல்லது ஒரு சில பகுதிகளில் மட்டும் வீக்கம், வலி ஏற்படலாம்.
மார்பகத்தின் சருமப் பகுதி நிறம் மங்குதல். மார்பக காம்பிலிருந்து திரவம் சுரத்தல் (பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படுவது இல்லை). எரிச்சல், சிவத்தல், நமைச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுதல். மார்பக காம்பில் வலி ஏற்படுவது.
மார்பகம் ஒன்றைவிட ஒன்று அளவு பெரிதாக இருப்பது. பார்க்கும்போதே அளவு வித்தியாசம் தெரிவது. காம்பு பகுதியில் தோல் உரிதல். மார்பகத்தில் கட்டி தென்படுவது ஆகியவை மார்பக புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
அந்த தோழிக்கும் மார்பகத்தில் கட்டி இருந்தது. ஆனால் அது புற்றுநோய் கட்டியில்லை என்று உறுதியானது. அது போல நமக்கு வந்த கட்டியும் புற்றுநோய் கட்டியாக இருக்காது என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். ஒவ்வொரு பெண்ணின் உடலும் வித்தியாசமானது. எனவே, வேறு ஒருவருக்குப் பொருந்தும் விஷயம் நமக்குப் பொருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அசாதாரண விஷயம் தென்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாடுங்கள்.
என்ன பிரச்னை என்பதை மருத்துவர் உறுதி செய்யட்டும். நாமாக சுய மருத்துவம் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.


