நெஞ்சு வலி வந்ததும் அஞ்சி நடுங்காம கொஞ்சம் இதை படிங்கண்ணே படிங்க !

 
chest

நெஞ்சு வலிக்கும் மாரடைப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

நெஞ்சில் வலி வந்தால், அதுவாய்வு வலியாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

chest-pain

அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.


40 வயதைக் கடந்தவர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டாலே, அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. ஆனால், எல்லா வகையான நெஞ்சு வலியும் இதய பாதிப்பால் மட்டும் உண்டாவதில்லை. தசைகள், எலும்பு, குடல்புண் உள்ளிட்ட காரணங்களாலும் நெஞ்சு வலி ஏற்படலாம். நெஞ்சுப் பகுதியில் ஊசி குத்துவதைப் போலச் சிறிது நேரம் வந்து போகும் வலிக்கும், இதயத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

எலும்பு அல்லது தசையால் நெஞ்சில் வலி ஏற்படும்போது, அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அழுத்திப் பார்த்தால் அந்த இடத்தில் வலி அதிகமாகும். குனியும்போதா, தும்மல் ஏற்படும்போதோ ஏற்படும் வலி, எலும்பு, தசை போன்றவற்றால் ஏற்படும் வலியாக இருக்கலாம். குடல்புண்ணால் ஏற்படும் நெஞ்சு வலியாக இருந்தால், சாப்பிடும்போது வலி அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை, தாடைப் பகுதியில் வலி போன்றவை இருந்தாலே, அது இதய பாதிப்பால் வந்த வலியாக இருக்கலாம் என்ற தவறான முடிவை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளாக இருந்தால், அவர்களுக்கு நைட்ரேட் வகை (Sorbitrate/Isordil) மாத்திரைகளை மருத்துவர் அறிவுறுத்தி இருப்பார். அவர்களுக்கு நடக்கும்போதோ, மாடிப்படி ஏறும்போதோ நெஞ்சுவலி ஏற்பட்டால், நைட்ரேட் வகை (Sorbitrate/Isordil) மாத்திரைகளை நாக்கு அடியில் வைத்துக்கொண்டு, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருவேளை சாதாரணமாக ஒருவர் நடக்கும்போதோ, மாடிப்படி ஏறும்போதோ நெஞ்சு வலி ஏற்பட்டால், நைட்ரேட் வகை மாத்திரைகளை நாக்கு அடியில் வைத்த பின், வலி குறைந்தால் அது ஆஞ்ஜைன்னாவாக இருக்கலாம். வலி தொடர்ந்து இருந்தால் மாரடைப்பாக இருக்கலாம். எனவே, அவர்களும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி.

மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது.

இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது.

இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது. இதய வலி - அறிகுறிகள் மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும்.

நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு - அறிகுறிகள் சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு

இதயவலி சில நேரங்களில் மார்பு பகுதியில் தசைப்பிடிப்பு உண்டாவதால் ஏற்படுகிறது. அதிக பளு தூக்குதல், குழந்தையை தூக்குவது, கனமான பொருள்களை தூக்கி மேலே ஏறுவது போன்றவை எல்லாமே இந்த மார்பு வலிக்கு காரணமாக இருக்கலாம் மார்புசுவரின் கோஸ்டோகாண்ட்ரிடிஸ் வீக்கத்துக்கு பெரும்பாலும் காரணமாகிறது. இந்த இடத்தில் குளிர் ஒத்தடம் பயன்படுத்துவதன் மூலம் வீக்கமும் வலியும் குறைகிறது.