கருத்தரிப்பு தடுப்பு மாத்திரைகள் எதிர்காலத்தில் குழந்தைப் பேற்றைத் தடுக்குமா?

 
Birth Control pills

தம்பதிகள் மத்தியில் தேவையற்ற கருத்தரிப்பைத் தவிர்க்க கருத்தரிப்பு தடுப்பு மாத்திரைகள் எடுப்பது தொடர்பான குழப்பம் உள்ளது. கருத்தரிப்பு தடுப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் எதிர்காலத்தில் நிரந்தரமாகக் குழந்தைப் பேறு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், குழப்பம் பலருக்கும் உள்ளது.

உண்மையில் இந்த பயம் தேவையில்லாதது. எத்தனை மாத்திரைகள் எடுத்தாலும், எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து எடுத்தாலும் சரி அதனால் எதிர்காலத்தில் குழந்தை கருத்தரிப்பதற்கான வாய்ப்பு பாதிக்கப்படாது.

இந்த மாத்திரைகள் தற்காலிகமாகக் கருத்தரிப்பதை, குழந்தை உருவாவதைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, நிரந்தர தடையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவில்லை.

சிலர் திருமணம் ஆகி இரண்டு, மூன்று மாதங்களில் கர்ப்பம் ஆகவில்லை என்றால் கூட குழந்தைப் பேறு நமக்கு இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடி வருவது அதிகரித்துள்ளது. பொதுவாக திருமணம் ஆகி ஓராண்டு முழுவதும் எந்த ஒரு கருத்தரிப்பு தடுப்பு சாதனம், மாத்திரை, ஆணுறை பயன்படுத்தாமல் தாம்பத்திய உறவு வைத்தும் கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் குழந்தைப்பேறு அடையும் வாய்ப்பு இல்லாதவர்கள் என்று கூற முடியாது. கருத்தரிப்பு தடுப்பு மாத்திரையோ, வேறு எந்த ஒரு தற்காலிக கர்ப்பத் தடுப்பு முறையோ நிரந்தர குழந்தைப் பேறு இன்மையை ஏற்படுத்துவது இல்லை.

இந்த மாத்திரைகள் புரோஜெஸ்ட்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை சார்ந்து உருவாக்கப்படுகிறது. அதனால், மாத்திரையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, குழந்தைப் பேற்றுக்கு முயற்சிக்கும் போது சிறிது தாமதம் ஏற்படலாம். ஆனால், அது நிரந்தர பாதிப்பு இல்லை. ஆய்வு ஒன்றில், மாத்திரையைப் பயன்படுத்துவதை நிறுத்திய பெண்களில் 20 சதவிகிதம் பேர் உடனே கருத்தரித்துள்ளனர். 80 சதவிகிதம் பெண்கள் ஓராண்டுக்குள் கருத்தரித்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே கருத்தரிக்காமலிருந்துள்ளனர். அதற்கு வேறு பல காரணங்கள் இருந்துள்ளது.

அதே நேரத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரை பயன்படுத்தி வந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அது கருத்தரிப்பதன் சாத்தியத்தை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, கருத்தரிப்பு தடுப்பு மாத்திரையோ, வேறு எந்த ஒரு கருத்தரிப்பு சாதனத்தையே பயன்படுத்தத் தயங்க வேண்டியது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.