பழங்களின் முழு பலனும் கிடைக்க எந்த நேரத்துல ,எப்படி சாப்பிடணும் தெரியுமா ?
பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளன. ஆனால் பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா? பலருக்கு மாலை அல்லது இரவு உணவிற்கு பிறகு பழங்களை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சூரிய அஸ்தமனத்திற்கு பழங்களை ஏன் பழங்களை உட்கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
![]()
பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் அது எளிதில் ஜீரணமாகும். பழங்களை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வேறு ஏதேனும் உணவை எடுத்துக் கொள்வதை எப்போதும் தவிர்க்கவும். உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது உணவை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்ளுங்கள், இல்லையெனில் உங்களுக்கு செரிமானம், அமிலத்தன்மை தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். தேகத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். `அற்றால் அளவறிந்து உண்க…’ என்ற குறள் கூறும் தத்துவத்தின்படி பழங்களையும் தேவையானஅளவு பயன்படுத்துவதுதான் நல்லது. பருவ காலத்தில் இயற்கையாக விளையும் பழங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால், வாழ்க்கைப் பருவமும் அதிகரிக்கும். பழங்களை வெட்டியவுடன் சாப்பிடுவது நல்லது. அவற்றை வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில நாள்கள் கழித்து சாப்பிடுவது முறையல்ல!
தலைவாழை இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்புத் துண்டுக்குப் பதிலாக, ஒரு பலாச்சுளையோ, நான்கைந்து திராட்சையோ, சிறிது மாதுளை முத்துகளோ இடம்பெறட்டும். அதிலிருக்கும் இனிப்புச் சுவையை உணர்ந்துவிட்டு, உணவை அனுபவியுங்கள். இலையில் வைக்கப்படும் ஒரு ஸ்வீட்டுடன் திருப்தியடையாமல், `இன்னொரு ஸ்வீட் சேர்த்து வைப்பா’ என்று சர்வரிடம் கேட்டு வாங்கி, முழு உணவைச் சாப்பிடும் முன்பே, கலோரிகள் உச்சத்தைத் தொட்டுவிடும் நிகழ்வுகள்தாம் இன்றைக்கு அதிகம் நடக்கின்றன.
இடை உணவாக ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக பழங்களைச் சுவைக்கலாம். உணவைச் சாப்பிட்டதும் பழங்களைச் சாப்பிடும்முறை செரிமானத்தில் பாதிப்பை உண்டாக்கும். மேலும் பழங்களின் மூலம் கிடைக்கவேண்டிய ஊட்டங்களும் பலன்களும் முழுமையாகக் கிடைக்காது. பொதுவாக விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும். (உணவோடு பழங்கள் – அதிஉணவு)
ஒரு தட்டு நிறைய பழத்துண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்வதாக இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து சுவைக்கலாம். இடை உணவாக, காலை 11 மணி… மாலை 4-5 மணி அளவில் ருசிக்கலாம்.
காலையில் பழங்கள்: `இரவு சாப்பிட்டதும் சில வாழைப் பழங்களை வாயில போட்டாதான், அடுத்த நாள் மலம் முறையாக வரும்’ என்று சொல்பவர்கள் பலர். ஆனால் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதுதான் முறை. மூன்று வேளை உணவுகளின் செரிமானத்துக்கு இடையூறு செய்யாமல், பழங்களை மென்று சாப்பிட்டாலே, அதிலுள்ள நார்ச்சத்து மலத்தை எளிமையாக்கும். ஒரு வேளை உணவைப் பழங்களாகவே எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தால், உங்கள் தேர்வு காலை வேளையாக இருக்கட்டும்.
எப்படிச் சாப்பிடலாம்: பலாப் பழம் சாப்பிட்டால் உண்டாகும் மந்த உணர்வைத் தடுக்க, அதனுடன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யாப் பழம் சாப்பிடும்போது, தொண்டை கரகரப்பது போலத் தோன்றினால், இருக்கவே இருக்கிறது மிளகு. வெள்ளரிப் பழம் மற்றும் விளாம்பழத் தசையுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், சுவை அதிகரிக்கும்; வயிற்று உபாதைகள் மறையும். கொட்டையுள்ள மாதுளையும் திராட்சையுமே முழுப் பலன்களைக் கொடுக்கும். ஹைபிரிட் ரகங்கள் சுவை கொடுக்குமே தவிர, சத்துகளைக் கொடுக்காது. ஆரஞ்சு ரகப் பழங்களை அதிலிருக்கும் நார்ச்சத்துடன் முழுமையாகச் சாப்பிடவேண்டும்.
உடலின் வளர்சிதை மாற்றம், அதாவது மெடாபாலிஸம் குறைவதால் பழங்களை மாலையில் சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். பழங்கள் சாப்பிடுவது, உங்களுக்கு உடனடி சக்தியைத் தருகின்றன. ஏனெனில் அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உள்ளது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் குறையும் போது கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்லதல்ல.


