உடும்பும், காடையும் சொல்லும் ஆரோக்கிய ரகசியம்!

வழக்கம் போல பாண்டிய மன்னன் சபை கூடியது. மன்னர் அவை புலவர்களை பார்த்து தனது சிம்ம குரலில் கர்ஜிக்க ஆரம்பித்தார்.
வழக்கம் போல பாண்டிய மன்னன் சபை கூடியது. மன்னர் அவை புலவர்களை பார்த்து தனது சிம்ம குரலில் கர்ஜிக்க ஆரம்பித்தார்.
`மேன்மை பொருந்திய புலவர்களே! மக்கள் ஆரோக்கியமாக வாழ சிறப்பான ஆலோசனைகளைச் சொல்லும் புலவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். உங்களது ஆலோசனைகள் மக்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படும் படியாகவும் இருக்க வேண்டும்’ என்று அறிவித்ததும் கூடி நின்ற புலவர்கள் பரபரப்பானார்கள்.
ஆரோக்கியம் என்று மன்னர் சொன்னதும் அசைவப்பிரியரான ஒரு புலவர் எழுந்து தன் தரப்பு கருத்துக்களை கூறினார்
மேன்மை பொருந்திய மன்னா
முழு உடும்பு
முக்கால் காடை
அரை முயல்
ஆட்டுக்கால்
இப்படி அசைவ உணவுகளை மக்கள் உண்டால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்றார்,
உடனே தலைமைப் புலவர், `என்ன புலவரே! உடும்பு, காடை என்று காட்டில் வாழும் உயிரினங்களின் பெயரை சொல்லுகிறீர்கள். விளக்கமாக கூறும்!
அதாவது
உடும்புக்கறி மனிதனுக்கு முழு சத்து
காடை கறி முக்கால் சத்து
அரை சத்து முயல்கறியுடன்
ஆட்டு கறியும் சேர்த்தால் மனிதன் நோயில்லாமல் வாழலாம் என்று விளக்கமாக புலவர் கூறியதும், ஆகா! அருமையான கருத்துக்கள்! உடனே நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். அமைச்சர்களே! புலவருக்கு தக்க சன்மானம் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்! என்று மன்னர் சொன்னார்.
கூட்டத்தில் இருந்து இப்போது ஒரு குரல் ஒலித்தது. சற்று பொறுங்கள் மன்னா! என்று குரல் வந்த திசையைத் திரும்பி பார்த்தார் மன்னார்.

அங்கே அரசவைப் புலவர் இந்த செய்யுளை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார். புலவரே! உங்கள் கருத்துக்களை மக்கள் பின்பற்றினால் ஒரே மாதத்தில் காட்டில் இந்த உயிரினங்கள் ஒன்று கூட மிச்சம் இல்லாமல் அழிந்து போகும். மக்களும் சைவ உணவை விட அசைவ உணவு உண்பது மட்டும் தான் ஆரோக்கியமானது என்கிற தவறான கருத்துக்கு வந்து விடக் கூடிய ஆபத்து உள்ளது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றார்.
உடனே மன்னர், புலவர்களே விவாதம் வேண்டாம் எல்லோரும் கலந்து பேசி சரியான முடிவெடுங்கள் என்றார். அவையில் சற்று நேரம் அமைதி நிலவியது. இந்த கவிதை, மன்னருக்கு பிடித்து விட்டது. ஆகையால் கவிதைக்கான கருத்துக்களை மட்டும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
இந்த கவிதைக்கான சரியான விளக்கத்தை யார் சொல்கிறார்களோ அவர்கள் யாராக இருந்தாலும் பரிசு கிடைக்கும் என்று அறிவித்தார்கள். நகர் முழுவதும் கவிதையைச் சொல்லி அதற்கான விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அறிவிப்பாளர்கள்.

கவிதையைக் கேட்ட மக்கள் அனைவரும் கவிதையை ரசித்தார்களேயொழிய அதற்கான விளக்கத்தை ஆளாளுக்கு ஒருவிதமாக யூகித்துக் கொண்டார்கள்.
இதைக் கேட்ட சலவைத் தொழிலாளி ஒருவன், நேரே அரண்மனைக்குச் சென்று கவிதைக்கான விளக்கத்தைத் தான் சொல்வதாக கூறினான். கூடியிருந்த புலவர் கூட்டம் சலவைத் தொழிலாளி சொன்னதும் எள்ளி நகையாடியது.

சற்று பொறுங்கள்.. சொல்வது எவராயிருந்தாலும் அவர் சொல்ல வரும் கருத்துக்கள் தான் முக்கியம். நீங்கள் விளக்கத்தைச் சொல்லத் துவங்கலாம்… என்று மன்னர் சலவைத் தொழிலாளியை ஆர்வத்துடன் பார்த்தார்.
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, அவனுடைய முழு உடம்பையும் மூழ்கி குளித்து, முழங்காலுக்கு கீழ் வரை ஆடை உடுத்தி, அறம் செய்ய முயன்று கால்களை ஒரே இடத்தில் வைக்காமல் நடந்து வாழ்ந்தால் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்று கூறினான்.
சலவைத் தொழிலளி இவ்வாறு சொன்னதும், சபையில் அமைதி நிலவியது. கூடியிருந்த புலவர்கள் ஆமோதித்தார்கள்.
முழ உடும்பு
முழு உடம்பையும் நீரில்மூழ்கி
முக்கால் காடை
முழங்கால் வரை ஆடை உடுத்தி
அரை முயல்
அறம் செய்ய முயன்று
கால் ஆடு
கால்களை ஒரே இடத்தில் வைக்காமல் தினம் நடந்து வாழ்ந்தால், மனிதன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்று மன்னர் மக்களுக்கு அறிவித்து பரிசை பாடலைச் சொன்ன புலவருக்கும் சரியான விளக்கம் தந்த சலவைத் தொழிலாளிக்கும் பிரித்து கொடுத்தார்.
யார் பரிசு வாங்கினாலும் நமக்கு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த பாடலின் பொருளை நாமும் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், ஆரோக்கியமாக வாழலாம்.

