கணையம் காக்க 10 வழிகள்!

இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கணையத்துக்கு கொடுப்பது இல்லை. கணையம் என்ற ஒரு உறுப்பு எதற்காக இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. நம்முடைய உடலில் உள்ள மிகவும் மென்மையான உறுப்பு கணையம். அதுதான் நம்முடைய உணவு செரிமானம் ஆக தேவையான என்சைம்களை உருவாக்குகிறது. மேலும் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதத்தைச் சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றித் தரும் நொதிகள் எல்லாம் கணையத்தில் இருந்துதான் வருகின்றன. அனைத்துக்கும் மேலாக அனைவரையும் அச்சப்பட வைக்கும் சர்க்கரை நோய்க்குக் காரணமான இன்சுலின் கணையத்தில்தான் சுரக்கிறது. அப்படிப்பட்ட கணையத்தை காப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
1) கணையத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஆல்கஹால். மது கணையத்தில் சுரக்கும் என்சைம்களின் செயல்திறனை பாதிக்கிறது. ஆல்கஹால் அதிகரிக்கும் போது கணைய நீர் வெளியேறுவது தடைபடுகிறது. இதனால் கணைய நீர் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் மாறும்போது கணையத்தையே அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. எனவே, மது பழக்கத்தைக் கைவிடுவது கணையத்தை காக்க உதவும்.
2) உடல் பருமன் கணையத்தை பாதிக்கும். எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
3) தினசரி உடற்பயிற்சி செய்வது ஆக்சிஜன், நுண் ஊட்டச்சத்துக்கள் கணையம் முழுவதுக்கும் சென்று சேர துணை செய்யும்.
4) பித்தப்பையில் கல் பிரச்னை இருந்தால் அதன் காரணமாக கணைய நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். எனவே, பித்தப் பை கல் இருந்தால் உடனடியாக அதை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
5) காலிஃபிளவர், பிரக்கோலி, கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட சில காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது கணையத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
6) அதே போல் பூண்டு கணையத்தை பாதுகாக்கும் மிகச் சிறந்த மூலிகையாகும். பூண்டில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் கணையத்தில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து கணையத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
7) கொழுப்பு சத்து மிக்க ஜங்க் ஃபுட் சாப்பிடுவது அதிக அளவில கணைய நீர் சுரப்பைத் தூண்டுகிறது. அதிகப்படியாக வேலை செய்வதால் கணையம் பாதிப்படைகிறது. எனவே, ஜங்க் உணவுகளைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
8) கார்போஹைட்ரேட், கொழுப்பு அளவைக் குறைத்துக்கொள்வது போல, ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவையோ, அதை மட்டுமே எடுக்க வேண்டும். அதிகப்படியான புரதச்சத்து கிடைக்கும் போது அதை உடலுக்குத் தேவையான வகையில் உடைத்துக்கொடுக்கக் கணையம் அதிக அளவில் வேலை செய்ய வேண்டியுள்ளது.
9) கணையம் நடு இரவில் செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை சுரக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இல்லை. இதனால் இரவில் மிக தாமதமாகச் சாப்பிடுவது கணையத்துக்கு கூடுதல் வேலைப் பளுவை ஏற்படுத்தும். மேலும் செரிமானத்திறன் பாதிக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிவிடும்.
10) ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை மீறி அதிகரிக்கும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்தச் செயல்பாடு காரணமாக, கணையம் பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க கிளைசமிக் இண்டெக்ஸ் (உணவின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன்) குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


