காலையில் எழுந்திருக்க சரியான நேரம் எது?

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் மாறிவிட்ட வாழ்க்கை சூழலில் காலையில் எழுந்திருப்பது பலருக்கும் முடியாத காரியமாக உள்ளது. காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பது நல்லதா, ஏழு மணிக்கு எழுந்திருக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
ஆனால் நம்முடைய பாரம்பரிய சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிப்பது சிறந்தது என்று கூறுகின்றன. அதாவது அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள்ளாக கண் விழிக்க வேண்டும். நம்முடைய முன்னோர்களும் சூர்யோதயத்திற்கு முன்பு கண்விழிக்க வேண்டும் என்று கூறுவதை கேள்விப்பட்டிருக்கலாம்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிப்பது உடலுக்கு பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்கச் செய்யும். பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழித்தால் மட்டும் எல்லாம் நடந்துவிடும் என்று கருத வேண்டாம்.
அதிகாலையில் கண் விழித்து உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யலாம். இவை ஒட்டுமொத்த அளவில் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும். உடலின் சமநிலை மற்றும் மனநிலையை மேம்படுத்தும். நினைவாற்றல், கவனிக்கும் திறன், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் என மூளையின் செயல்திறன் மேம்படும். அதிகாலையில் தியானம் செய்வது ஞானத்தை அடைய உதவும்.
நம்முடைய உடல் பித்தம், வாதம், கபத்தால் ஆனது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. இந்த மூன்றும் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றம் இறக்கத்தை வெளிப்படுத்தும். வாதம் தசைகளுடன் தொடர்புகொண்டது. தசைகள், மூச்சு, கண் சிமிட்டல், செல்களின் இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு வாதம் முக்கிய காரணம். செரிமானம், மெட்டபாலிசம் எல்லாம் பித்தத்துடன் தொடர்புடையது. எலும்பு, தசை என உடலின் அமைப்புடன் தொடர்புடையது கபம். காலையில் கண் விழிப்பதன் மூலம் பித்தம், வாதம், கபம் ஆகியவை இணைந்து உடலில் ஏற்பட்ட பிரச்னைகளை போக்கும், உடலின் உறுதி, வலிமை, வளைந்துகொடுக்கும் தன்மை மற்றும் மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.
பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிக்க முடியாதவர்கள் உடல்வாகு அடிப்படையில் கண் விழிப்பதை அமைத்துக்கொள்ளலாம். அனைவரும் சூரிய உதயத்துக்கு முன்பு கண் வழிப்பது நல்லது. வாத உடல்வாகு கொண்டவர்கள் சூரிய உதயத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவும், பித்த உடல் வாகு கொண்டவர்கள் 45 நிமிடங்களுக்கு முன்னதாகவும் கப உடல் வாகு கொண்டவர்கள் 90 நிமிடங்களுக்கு முன்னதாகவும் கண் விழிப்பது நல்லது. தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், இரவில் மிக தாமதமாக தூங்கியவர்கள் கூட காலை 7 மணிக்கு முன்பு கண் விழித்துவிட வேண்டும்.


