ஸ்கிப்பிங் விளையாடுவதால் கிடைக்கும் பலன்கள்!

வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், விலை உயர்ந்த கருவிகள் வேண்டாம், சிறிய கயிறு இருந்தாலே போதும் வீட்டிலேயே உடலை ஃபிட்டாக்கும் பயிற்சியை செய்யலாம். இந்த கொரோனா காலத்தில் ஜிம்முக்கு செல்வது, வெளியே பொது இடங்களில் வாக்கிங் செல்வது போன்றவை அபாயகரமானதாக பார்க்கப்படும் சூழலில் வீட்டிலிருந்து ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம், பிட்டாகலாம் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.
மற்ற எல்லா பயிற்சிகளைக் காட்டிலும் ஒரு நிமிடத்திற்கு 10 – 20 கலோரிகள் வரை செலவு செய்ய முடியும். மேலும் கால், பின்பகுதி, வயிறு, புஜம் என முக்கிய தசைகள் உறுதியாகும். 10 நிமிடம் பயிற்சி செய்தால் தாராளமாக 200 கலோரிகள் வரை எரிக்கலாம். பிரிஸ்க் வாக்கிங்கைக் காட்டிலும் அதிக பலன் அளிக்கக் கூடியது.
நடைப் பயிற்சியைக் காட்டிலும் ஸ்கிப்பிங் மிகச் சிறந்த கார்டியோ பயிற்சியாக இருக்கிறது. தொடர்ந்து ஸ்கிப்பிங் விளையாடி வந்தால் இதய நோய்கள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
ஸ்கிப்பிங் சாதாரணமாகக் குதித்து விளையாடும் விளையாட்டு இல்லை. கயிற்றைச் சுழற்ற வேண்டும், அதற்கு ஏற்ப குதிக்க வேண்டும். கவனம் கயிறு மற்றும் குதிப்பது என இரண்டின் மீதும் இருக்க வேண்டும். இது கவனிப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
அனைத்து உறுப்புக்களையும் ஒன்று சேர்த்து விளையாடுவது உறுப்புக்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்டாமினாவை அதிகரிக்கச் செய்கிறது. தொடர்ந்து ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் சோர்வு பிரச்னையே இருக்காது.
ஸ்கிப்பிங் பயிற்சி மன அழுத்தம், மனப் பதற்றத்தைக் குறைக்கிறது. இதனால் மூளையின் செயல் திறன், மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறது.
மிக வேகமாக தொப்பையைக் கரைக்க நினைப்பவர்களுக்கு ஸ்கிப்பிங் மிகச் சிறந்த பயிற்சியாக இருக்கிறது. தொடக்கத்தில் ஸ்கிப்பிங் சற்று கடினமான பயிற்சியாகத் தெரியும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு இன்றி ஸ்கிப்பிங் செய்தால் கூட தொப்பை கரைவதுடன், வயிறு தசை உறுதியாகும்.
குதித்து விளையாடும்போது எலும்புகள் உறுதியாகின்றன. எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக எலும்பு முறிவு, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
ஸ்கிப்பிங் பயிற்சி காரணமாக உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. இதனால் சருமம் பொலிவு பெறும். நுரையீரலின் செயல் திறன் மேம்படும்.


