இந்த சின்ன சின்ன தவறுகள் கூட எலும்பின் உறுதியை பாதிக்கும்!

 

இந்த சின்ன சின்ன தவறுகள் கூட எலும்பின் உறுதியை பாதிக்கும்!

ஆர்த்ரைடிஸ் எனப்படும் எலும்பு வலிமை குறைவு பிரச்னை என்பது வயோதிகம் காரணமாக ஏற்படக் கூடியது, வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லோரும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது என்று பலரும் கருதுகின்றனர். அதே நேரத்தில் இளம் வயதிலேயே சிலருக்கு எலும்பு மூட்டு பிரச்னை வருவதையும் முதிர் வயதிலும் எலும்பு மூட்டு பிரச்னை இன்றி சிலர் ஆரோக்கியமாக இருப்பதையும் காண்கிறோம். இதன் மூலம் ஆர்த்ரைடிஸ் பிரச்னைக்கு வயது மட்டுமே காரணம் என்பது தவறானது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இந்த சின்ன சின்ன தவறுகள் கூட எலும்பின் உறுதியை பாதிக்கும்!

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில தவறான செயல்கள் எலும்புகளின் வலிமையை பாதிப்படைய செய்யலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் எலும்பு வலிமைக் குறைவை நம்மால் தவிர்க்க முடியும். எலும்பின் வலிமையை பாதிக்கும் சில தவறுகள் பற்றிப் பார்ப்போம்!

சிகரெட் புகைப்பது நுரையீரலை மட்டுமல்ல எலும்புகளையும் சேர்த்தே பாதிப்படைய செய்கின்றது. புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவு விரைவாக நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிகரெட் புகைப்பது கார்டிசோல் என்ற ஸ்டிரஸ் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது. இது எலும்புகளின் அடர்த்தியைக் குறையச் செய்கிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பு அடர்த்தி குறைந்து பாதிப்பு வருகிறது.

துடிப்பான வாழ்க்கை முறை இன்மையும் எலும்பு அடர்த்தி குறைவுக்கு வழி வகுக்கிறது. உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் இருக்கம் அடைந்து எலும்புகள் வலிமையாக இருக்கச் செய்கிறது.

மது அருந்துவதும் எலும்பின் அடர்த்தியைப் பாதிப்படைய செய்கிறது. ஆல்கஹால் டெஸ்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. இது எலும்பு அடர்த்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிக அளவில் உப்பு சேர்ப்பதும் எலும்பு அடர்த்தியை பாதிப்படைய செய்கிறது. உடலில் சோடியம் அளவு அதிகரிப்பது கால்சியத்தை சிதைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றச் சயய்துவிடுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைப்பது எலும்புகளைப் பாதுகாக்க உதவும்.

நாள் முழுக்க வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்யும். வெளியே, வெயிலில் நடக்கும் போது வைட்டமின் டி-யை நம்முடைய உடல் உற்பத்தி செய்யும். இது எலும்பின் உறுதியை அதிகரிக்க அவசியம் தேவை. தினமும் சிறிது நேரம் வெயிலில் நடப்பது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி உற்பத்தியைத் தூண்டி எலும்பை உறுதியாக்கும்.