’மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகுது’ முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்

 

’மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகுது’ முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்

கொரோனாவின் பாதிப்பின் ஊடாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பம்பு செட் தண்ணீரில் விவசாயம் செய்து அறுவடை செய்துள்ளனர். ஆனால், அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், ’தமிழ்நாட்டில் நெல் ஒரு பிரதானமான பயிர். காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பகுதி மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

’மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகுது’ முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்

கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுகிற காரணத்தால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் மழையில் நனைந்து விவசாயிகளுக்கும், அரசுக்கும் ஆண்டுதோறும் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. நனைந்த நெல்மூட்டைகள் அப்படியே அடுக்கப்படுவதால் கெட்டுப்போய் மனிதர்களால் பயன்படுத்த முடியாத அளவிற்கு அரிசி நாற்றமெடுத்து வீணாகிறது. விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்த நெல் இப்படி வீணாவதை எவராலும் நியாயப்படுத்த முடியாது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்த ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழை, ஜுன், ஜுலை மாதங்களில் பெய்த மழையால் பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகிவிட்டதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டது. எனவே இத்தகைய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் நிரந்தரமான பாதுகாப்பான  கிடங்கு வசதிகளை தேவைக்கேற்ப ஒவ்வொரு ஒன்றியத்திலும் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

’மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகுது’ முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்

கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் முழுவதும் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு பணம் வழங்கப்படுவதை, உத்தரவாதப்படுத்த வேண்டும். அத்துடன் மழையால் நனைந்து நாசமான நெல் மூட்டைகளுக்கு உரிய பணம் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.