இப்படியும் எடை குறைக்கலாம்… வாங்க!

 

இப்படியும் எடை குறைக்கலாம்… வாங்க!

உடல் எடை குறைக்க என்னென்னவோ சிகிச்சைகள் வந்திருக்கின்றன. டயட் என்ற பெயரில் ஏழே நாளில் எடை குறைக்கலாம், வாரம் ஒரு கிலோ, மாதம் ஒரு கிலோ, 30 நாளில் 30 கிலோ எடை குறைக்கலாம் என்று விளம்பரங்களைக் காண முடிகிறது. பலர் இதை நம்பி வீணாக பணம் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பலருக்கு பலன் கிடைப்பதில்லை. எடை குறைப்பதாகச் சொல்லி அறுவை சிகிச்சை செய்து அது விபரீதத்தில் முடிந்த சம்பவங்களும் உண்டு. எடை குறைக்கும் எளிய வழிமுறைகளை மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரன் சொல்வதைக் கேட்போம்.

இப்படியும் எடை குறைக்கலாம்… வாங்க!பட்டினி சிகிச்சை:
எடை குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. சிலர் பட்டினி கிடந்தாலே எடை குறைந்துவிடுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பட்டினி கிடந்தாலும் சிலருக்கு எடை அதிகரிக்கிறது. எனவே, முதலில் எங்கே கோளாறு என்று பார்க்கவேண்டும். சிலருக்கு ஹார்மோன் கோளாறுகளால் எடை கூடலாம்; எனவே, எடை எதனால் கூடுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை முதலில் சரி செய்யவேண்டும்.

எடை குறைப்பதற்கென்று சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன. காலையில் கண்விழித்ததும் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழம், கொஞ்சம் தேன் கலந்து குடிக்கலாம். இல்லையென்றால் இரண்டு, மூன்று கொய்யா இலைகளை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து தேன் கலந்து குடிக்கலாம். நெல்லிக்காய், இஞ்சி சேர்த்து சாறு எடுத்தும் குடிக்கலாம். காபி, டீ குடிப்பதை தவிர்த்தால் மிகவும் நல்லது.

இப்படியும் எடை குறைக்கலாம்… வாங்க!ஜூஸ்:
இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து எதாவது ஒரு ஜூஸ் செய்து குடிக்கலாம். வயிற்றுக்கு கெடுதல் இல்லாத ஜூஸாக இருந்தால் நல்லது. வெள்ளரி ஜூஸ் மிகவும் நல்லது. அதை எப்படி செய்வதென்று பார்ப்போம். சிறியதாக ஒரு வெள்ளரிக்காயை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது இஞ்சி, சிறிது மல்லித்தழை, அரை எலுமிச்சம்பழம், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸும் குடிக்கலாம். இதைத் தயார் செய்ய ஆரஞ்சுப்பழம் மட்டுமல்லாமல் கேரட், இஞ்சி தேவை. தேவையான அளவு கேரட் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து அதனுடன் ஆரஞ்சுச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். இதை காலை உணவாகக்கூட வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை பசி எடுத்தா பழங்கள் சாப்பிடலாம். முக்கியமாக பப்பாளிப்பழம் நல்லது. மாதுளை, திராட்சை, வாழை, பேரிக்காய், தர்பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, அவகேடா பழங்களைச் சாப்பிடலாம்.

இப்படியும் எடை குறைக்கலாம்… வாங்க!மோர்:
காலை 10, 11 மணிக்கு காபி, டீ குடிக்க நினைத்தால் மோர் குடிப்பது நல்லது. மல்லித்தழை, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சித்துண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துமோருடன் கலந்து குடிக்கலாம். மதிய உணவில் அசைவம் வேண்டாம். பாரம்பரிய அரிசி, சிறுதானிய உணவு நல்லது. வழக்கமான சாம்பார், காரக்குழம்பில் குடம்புளி, இந்துப்பு சேர்க்கலாம். வெள்ளரிக்காய் அல்லது கேரட்டைத் துருவி எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். கொள்ளு ரசம் அல்லது கண்டதிப்பிலி ரசம் நல்லது. இஞ்சி, பிரண்டைத்துவையல், மல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை துவையல் சேர்க்கலாம். பப்பாளி, சுரைக்காய் கூட்டு சாப்பிடலாம்.

மாலை வேளையில் சுக்கு வெந்நீர் குடிக்கலாம். முளைகட்டிய கொள்ளு அல்லது வேக வைத்த கொள்ளுப்பயறைச் சாப்பிடலாம். இரவில் இட்லி, இடியாப்பம் சாப்பிடலாம். இல்லையென்றால் வெறும் பழங்கள் மட்டும் சாப்பிடலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். நாள் முழுவதும் சீரகம், பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துக் குடிக்கலாம். இரவு தூங்கப்போவதற்குமுன் திரிபலா சூரணம் குடிப்பது நல்லது.