எலியின் சிறுநீர் மூலம் பரவும் கொடிய காய்ச்சல்… கல்லீரல், சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம்!

 

எலியின் சிறுநீர் மூலம் பரவும் கொடிய காய்ச்சல்… கல்லீரல், சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம்!

கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு போன்றவை பரவுகின்றன. எலியின் சிறுநீர் மூலமாக மனிதர்களுக்கு தொற்று பரவி மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் காய்ச்சலுக்கு எலிக் காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பைரோசிஸ் என்று பெயர். இந்த காய்ச்சல் யாருக்கு எல்லாம் வரும், என்ன மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பதைப் பற்றி பார்ப்போம்!

எலியின் சிறுநீர் மூலம் பரவும் கொடிய காய்ச்சல்… கல்லீரல், சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம்!

லெப்டோஸ்பைரோசிஸ் என்பது பாக்டீரியா தொற்றால் ஏற்படும் பாதிப்பாகும். இதில் பல வகைகள் உள்ளன. சில வகை தொற்று உயிரிழப்பு வரை கொண்டு சென்றுவிடும். இந்த பாக்டீரியா மனிதர்களின் பாதம், வெட்டுக் காயம், கண் வழியாக உள்ளே நுழைகின்றது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கானோர் இந்த நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

நோய்க் கிருமி உடலுக்குள் சென்றதிலிருந்து 5 முதல் 14 நாட்களில் தன்னுடைய பாதிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், உடல் அவ்வப்போது சில்லிட்டுப் போதல் இருக்கும். இருமல், வயிற்றுப் போக்கு, வாந்தி அல்லது இந்த இரண்டும், தலைவலி, உடல் வலி, கீழ் முதுகு வலி, உடல் முழுக்க அரிப்பு, கண்கள் சிவத்தல், மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படும்.

வீரியம் குறைந்த பாக்டீரியா என்றால் அறிகுறிகள் சில நாள் வெளிப்படுத்தும் பிறகு அது சரியாகிவிடும். வீரியம் மிக்க பாக்டீரியா என்றால் அது மூளை, சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்துவிடும். இதன் காரணமாக உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

இந்த காய்ச்சலை இதன் அறிகுறியை வைத்துக் கண்டுபிடிப்பது என்பது சிக்கலானது. ஏனெனில் இதன் அறிகுறியும் சாதாரண காய்ச்சலின் அறிகுறியும் ஒன்றாகவே இருக்கும். ரத்த பரிசோதனை மூலம் மட்டுமே இதன் பாதிப்பை அறிய முடியும்.

எலிக் காய்ச்சல் பெரும்பாலும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் அதிக அளவில் ஏற்படுகிறது. வெப்பம் மற்றும் அதிக காற்றின் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் இந்த பாக்டீரியா பிழைத்து வாழ்கிறது.  மழை பெய்யும் போது எலியின் கழிவுடன் பாக்டீரியா கிருமி பரவி மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எலிக் காய்ச்சல் வருவதைத் தவிர்க்க பொதுச் சுகாதாரம் மிகவும் அவசியம். வீட்டுக்கு வெளியே கூட வெறும் காலில் நடக்க வேண்டாம். அந்த இடத்தில் எலி அசுத்தம் செய்திருக்கலாம்.

வெளியே சென்று வந்ததும் கை, கால்களை சோப் போட்டுக் கழுவ வேண்டும். மழைக் காலத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலந்திருக்கும். எனவே, வீட்டுக்கு வந்ததும் வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊறவைத்துக் கழுவ வேண்டும்.

தண்ணீரை எப்போதும் கொதிக்க வைத்து ஆறவைத்து அருந்த வேண்டும்.  காலில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருந்து போட்டு அதை மூட வேண்டும்.