`அரசியல் பகை; ஸ்கேட்ச் போட்ட கூலிப் படை!’- வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பஞ்சாயத்து தலைவர்

 

`அரசியல் பகை; ஸ்கேட்ச் போட்ட கூலிப் படை!’- வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பஞ்சாயத்து தலைவர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊராட்சி தலைவர் ஒருவர், மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருநின்றவூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`அரசியல் பகை; ஸ்கேட்ச் போட்ட கூலிப் படை!’- வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பஞ்சாயத்து தலைவர்

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை அடுத்த கொட்டாம்பேடு, லட்சுமிபதி நகரைச் சேர்ந்த பரமகுரு (41) வழக்கறிஞராக இருந்தார். இவரது மனைவி ஷீபா (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தி.மு‌.கவை சேர்ந்த பரமகுரு, கடந்த தேர்தலில் வெற்றி பெற்று கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், கொட்டாம்பேடு அருகே உள்ள அருந்தியர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பார்வையிட பரமகுரு நேற்று மாலை அங்கு சென்றுள்ளார். அப்போது, பணிகளை பார்வையிட்டபடி சென்ற பரமகுரு, தனது மொபைல்போனில் பேசியபடி சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பரமகுருவை சுற்றி வளைத்தனர். அப்போது, ஏற்கெனவே பரம குருவை நோட்டமிட்டபடி இருந்த இரண்டு பேர் அரிவாளுடன் அங்கு சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் 6 பேரும் சேர்ந்து பரமகுருவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பரமகுரு உயிரிழந்தார்.

`அரசியல் பகை; ஸ்கேட்ச் போட்ட கூலிப் படை!’- வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பஞ்சாயத்து தலைவர்

இந்த அந்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது ஆயுதங்களை சாலையில் தீப்பொறி கிளம்ப தேய்த்தபடி சென்றது வாகன ஓட்டிகளை பதறவைத்ததோடு, அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஊராட்சி மன்றத்தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து அங்கு வந்த திருநின்றவூர் காவல்துறையினர் அவர்களை சமரசப்படுத்தினர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொட்டாம்பேடு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.