வெறும் 3 ரூபாய் 46 பைசா கடனை திருப்பி செலுத்த 15 கி.மீ நடக்க வைக்கப்பட்ட விவசாயி

 

வெறும் 3 ரூபாய் 46 பைசா கடனை திருப்பி செலுத்த 15 கி.மீ நடக்க வைக்கப்பட்ட விவசாயி

ஷிமோகா: கர்நாடக மாநிலத்தில் ரூ.3.46 கடனை திருப்பி செலுத்த ஒரு விவசாயி 15 கி.மீ நடக்க வைக்கப்பட்ட மனிதத் தன்மையற்ற சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் மலைப்பாங்கான ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் அமதே லட்சுமிநாராயணா என்கிற விவசாயி. அவருக்கு 15 கி.மீ தொலைவில் உள்ள கனரா வங்கி கிளையில் இருந்து போனில் அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசியவர், கடன் தொகையை திருப்பிச் செலுத்த உடனே வங்கிக்கு சீக்கிரமாக வருமாறு கூறியுள்ளார். அந்த விவசாயிக்கு மேலதிக விபரங்கள் எதையும் வங்கியில் இருந்து போனில் பேசியவர் தெரிவிக்கவில்லை.

பொதுமுடக்கம் காரணமாக பேருந்து சேவைகள் இல்லாததால் பீதியடைந்த லட்சுமிநாராயணன், 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வங்கியை அடைந்தார்.​அங்கு அதிகாரிகளிடம் சென்று கடன் தொகை குறித்த விஷயத்தை லட்சுமிநாராயணா கேட்டார். அப்போது அவர்கள் கூரியதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் லட்சுமிநாராயணா செலுத்த வேண்டிய கடன் தொகை 3 ரூபாய் 46 பைசா என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

வெறும் 3 ரூபாய் 46 பைசா கடனை திருப்பி செலுத்த 15 கி.மீ நடக்க வைக்கப்பட்ட விவசாயி

இதையடுத்து கடனை முழுமையாக திருப்பி செலுத்துவதற்காக விவசாயி உடனடியாக அந்த தொகையை செலுத்தினார். வங்கியில் இருந்து ரூ.35,000 விவசாய கடனை லட்சுமி நாராயணா வாங்கியிருந்தார். அதில் ரூ.32,000 அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மீதமுள்ள ரூ.3,000-ஐ அவர் வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனால் ரூ.3.46 நிலுவைத் தொகை பாக்கி இருந்திருக்கிறது. இவ்வளவு குறைவான தொகைக்காக இந்த கொரோனா ஊரடங்கு நேரத்திலும் 15 கி.மீ தூரம் விவசாயி நடக்க வைக்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட வங்கி கிளை மேலாளரிடம் கேட்கப்பட்டதற்கு, தங்கள் வங்கி கிளையில் ஆண்டு தணிக்கை நடந்து வருவதாகவும் அந்த விவசாயியின் கடனை புதுப்பிக்க அவர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமானது என்றும் அதுதவிர அந்த விவசாயியின் கையொப்பமும் தேவைப்பட்டதாலேயே அவர் நேரில் அழைக்கப்பட்டதாக கூறினார்.