காமராஜரின் 119 வது பிறந்தநாள் : ராமதாஸ், அன்புமணி புகழாரம்!

 

காமராஜரின் 119 வது பிறந்தநாள் : ராமதாஸ், அன்புமணி புகழாரம்!

கல்வியில் சிறந்த தமிழகத்தை அமைக்க காமராஜர் பிறந்தநாளில் உறுதியேற்போம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 119 வது இன்று கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதேபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி புகழாரம் சூட்டியுள்ளதுடன், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜரின் 119 வது பிறந்தநாள் : ராமதாஸ், அன்புமணி புகழாரம்!

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 119 -ஆவது பிறந்தநாள். ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட கல்வியை மீட்டெடுத்துக் கொடுத்து, படிக்கும் சமுதாயத்தை அமைக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாபெரும் மக்கள் தலைவரை இந்த நன்னாளில் வணங்குவோம்…. போற்றுவோம்!

கல்வியில் சிறந்த தமிழகத்தை அமைக்க வேண்டும் என்பது தான் காமராஜரின் நோக்கம். சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை. இவை இரண்டும் நிறைவேற வேண்டும்!

கல்வியில் சிறந்த தமிழகத்தை படைப்பதும், அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை கட்டாயமாக வழங்குவதும் பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே சாத்தியம். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக உழைக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமிழ்நாட்டில் கல்லாமையை போக்கி, இல்லாமையை அகற்ற பாடுபட்ட கர்மவீரர் காமராஜரின் 119-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை நான் வணங்குகிறேன்.தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால் உழவும், தொழிலும் முக்கியம் என்று நம்பியவர்.

உழவை பாதிக்காமல் தொழிற்சாலைகளை கொண்டு வந்தவர். வேளாண்மை செழிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பாசனத் திட்டங்களை செயல்படுத்தியவர்!தமிழகம் செழிக்க வேண்டும் என்பது தான் காமராஜரின் கனவு. அந்தக் கனவு நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை. அதற்காக உழைக்கவும், சரியான முடிவுகளை எடுக்கவும் பெருந்தலைவரின் பிறந்த நாளில் உறுதியேற்போம்! ” என்று பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.