முதல்வர் ஸ்டாலினிடம் கே.பாலகிருஷ்ணன் வைத்த முக்கிய கோரிக்கை!

 

முதல்வர் ஸ்டாலினிடம் கே.பாலகிருஷ்ணன் வைத்த முக்கிய கோரிக்கை!

நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் அகவிலைப்படி, ஓய்வூதியத்தை மறுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பது உண்மை. ஆனால், அதைக் காரணமாகக் காட்டி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் ஆகிய வழக்கமான நடைமுறைகளை மறுக்ககூடாது. நாட்டின் நிதிநிலைமை, நெருக்கடியில் இருக்கும்போது மக்களுடைய வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு தரப்படும் ஊதியம், சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும். அப்போதுதான் வரி வருவாயும் அதிகரிக்கும்.

முதல்வர் ஸ்டாலினிடம் கே.பாலகிருஷ்ணன் வைத்த முக்கிய கோரிக்கை!

ஊதியம் குறைந்து வாங்கும் சக்தியில் பாதிப்பு ஏற்பட்டால், வரி வருவாயிலும் சரிவு ஏற்படும். இதனை கணக்கில் கொண்டே கொரோனா பேரிடர் காலத்தில் உலகின் பல முதலாளித்துவ நாடுகள், மக்களின் கையில் குறிப்பிடத்தக்க நிதியை நிவாரணமாக வழங்கினார்கள். நாமும், மாதம் குறைந்தது ரூ.7500 எளிய மக்களின் கைகளில் தரவேண்டும் என ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசாங்கம், ஒன்றிய அரசிடமிருந்து கூடுதல் நிதியைப் பெறவேண்டும், முறையாக வரி வசூல் & பிற சாத்தியமான வழிகளில் நிதி திரட்டி பொதுச்செலவுகளை அதிகரிக்க வேண்டும்.

சரியான தீர்வுகளைத் தேடி நிலைமைகளைச் சீராக்குவது அரசின் கடமை, அதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நேர் மாறாக செலவினங்களை வெட்டிச் சுருக்கி, அதன் வழியாக நெருக்கடியை தீர்க்கலாமென நினைப்பது, பிரச்சனையை திசைதிருப்புவதாக அமைந்திடும், பொருளாதாரத்தை மேலும் நெருக்கடியில் தள்ளிடும். எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் இந்த விசயத்தில் தலையீடு செய்ய வேண்டும், நிதிச் செலவினங்கள் குறித்த அணுகுமுறையை மாற்றியமைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.