சர்ச்சையை கிளப்பிய கமல் நாத் கருத்து.. காங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதிக்கவில்லை.. சிந்தியா பதிலடி

சர்ச்சையை கிளப்பிய கமல் நாத் கருத்து.. காங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதிக்கவில்லை..  சிந்தியா பதிலடி

பா.ஜ.க. பெண் வேட்பாளரை அயிட்டம் என்று கமல் நாத் கூறியது குறித்து ஜோதிராதித்ய சிந்தியா, பெண்களை மதிப்பதில்லை என்ற வரலாறு காங்கிரசுக்கு உண்டு குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 28 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று தப்ரா சட்டப்பேரவை தொகுதி. இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுபவர் இமார்டி தேவி. இவர் காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்கு மாறியவர். ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளரான இமார்டி தேவி, சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தபோது அவரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

சர்ச்சையை கிளப்பிய கமல் நாத் கருத்து.. காங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதிக்கவில்லை..  சிந்தியா பதிலடி
ஜோதிராதித்ய சிந்தியா

இமார்டி தேவி போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுரேஷ் ராஜே என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் கமல் நாத் பேசுகையில், நமது வேட்பாளர் அவளை போன்றவர் அல்ல. அவளது பெயர் என்ன, உங்களுக்கு அவளை நன்றாக தெரியும். நீங்கள் முன்பே என்னை எச்சரித்திருக்க வேண்டும். என்ன ஒரு அயிட்டம் என தெரிவித்தார்.

சர்ச்சையை கிளப்பிய கமல் நாத் கருத்து.. காங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதிக்கவில்லை..  சிந்தியா பதிலடி
இமார்டி தேவி

கமல் நாத்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரசையும், கமல் நாத்தையும் குற்றம் சாட்டினார். ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், இதுதான் காங்கிரசின் கொள்கை. முதலில், திக்விஜய சிங் காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜனை ஏதோ கூறினார் அது எனக்கு சரியாக நினைவில்லை. தற்போது கமல் நாத் பா.ஜ.க.வின் இமார்டி தேவியை அயிட்டம் என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் அஜய் சிங் அவளை ஜிலேபி என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.