`பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு!’- ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ்

 

`பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு!’- ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ்

“பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. அப்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து, வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த வழக்குகளின் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த தீர்ப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில், “மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.