இன்டர்நெட், ஸ்மார்ட் போன் இல்லை… ஸ்பீக்கர் கட்டி பாடம் நடத்திய ஆசிரியர்கள்!

 

இன்டர்நெட், ஸ்மார்ட் போன் இல்லை… ஸ்பீக்கர் கட்டி பாடம் நடத்திய ஆசிரியர்கள்!

ஜார்கண்ட் மாநிலத்தில் மாணவர்களுக்கு ஸ்பீக்கர் மூலம் பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் என்றும் தெரியவில்லை. கொரோனா பாதிப்பு அடங்கிய பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக கூறி பெற்றோரிடமிருந்து கட்டணம் வசூலித்து வருகின்றன. கட்டணம் வசூலிப்பதை நியாயப்படுத்த ப்ரீக்கேஜி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து வகுப்பினருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், ஸ்மார்ட்போன், லேப்டாப் வசதி இல்லாத ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்டர்நெட், ஸ்மார்ட் போன் இல்லை… ஸ்பீக்கர் கட்டி பாடம் நடத்திய ஆசிரியர்கள்!
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழைகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதியான பங்கத்தி என்ற இடத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வகுப்புகள் எடுக்க முடியாத நிலையில் மைக், ஸ்பீக்கர் கட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்கிய நிலையில், ஏழை மாணவர்கள் படிக்க முடியாமல் அவதியுறுவதைக் கண்ட அந்த கிராம பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஊர் முழுக்க ஸ்பீக்கர் கட்டியுள்ளனர். பின்னர், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல வகுப்புகள் மைக் மூலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு பாடத்தில் சந்தேகம் இருந்தால் அது பற்றி ஆசிரியர்களின் மொபைல் போனைத் தொடர்புகொண்டு கூறலாம். அடுத்த நாள் மைக் வழியாக அந்த சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த செயலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.