மீண்டும் தமிழகம் வரும் நட்டா! மகளிரணி மாநாடு நடத்த திட்டம்

 

மீண்டும் தமிழகம் வரும் நட்டா! மகளிரணி மாநாடு நடத்த திட்டம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். அண்மையில் சென்னை வந்திருந்த அமித்ஷா, அரசு விழாவில் பங்கேற்று தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி படுத்திவிட்டுச் சென்றார். அதன்பின் தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அமித்ஷா மீண்டும் சென்னை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரது பயணம் தடைபட்டதாக தமிழக பாஜக தலைமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வந்தார். அப்போது பாஜக சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சென்றார். அதன்பின் கடந்த 30 ஆம் தேதி தமிழகம் வந்த ஜே.பி. நட்டா மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மீண்டும் தமிழகம் வரும் நட்டா! மகளிரணி மாநாடு நடத்த திட்டம்

இந்நிலையில் வரும் 23, 24 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வேலூர் வரவிருக்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. மகளிரணி மாநாடு, பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து நகர, கிராம மக்களிடம் எடுத்துரைக்க நட்டா திட்டமிட்டுள்ளார்.