“இந்த ஜாக் மா ஓடி ஒளியுற ஆள் இல்லடா” – 3 மாதங்களுக்குப் பின் திரையில் தோன்றினார்!

 

“இந்த ஜாக் மா ஓடி ஒளியுற ஆள் இல்லடா” – 3 மாதங்களுக்குப் பின் திரையில் தோன்றினார்!

அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். அவர் வீட்டுச்சிறையில் இருப்பதாக யூகங்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது ஆசிரியர்களுடன் அவர் உரையாடும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபல சீன தொழிலதிபரும், அலிபாபாவின் இணை நிறுவனருமான ஜாக் மா, நவம்பர் மாதத்திலிருந்து எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. ஜாக் மா எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ளும் நபர். அப்படியான ஒருவர் ஏன் இரண்டு மாதங்களுக்கு மேல் வெளியே வரவில்லை என்ற கேள்வியை சீனா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக மக்களுமே எழுப்பியிருந்தனர்.

“இந்த ஜாக் மா ஓடி ஒளியுற ஆள் இல்லடா” – 3 மாதங்களுக்குப் பின் திரையில் தோன்றினார்!

சீன அரசை விமர்சனம் செய்ததால், அவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று ஒரு சாரார் கூறினர். இல்லை, இல்லை அவர் எங்கேயும் ஓடி ஒளியவில்லை நிறுவன வளர்ச்சிக்கான வேலையில் பிஸியாக இருக்கிறார் என மற்றொரு சாரார் மறுத்தனர். ஆனால் சீன வங்கிகளின் மீதான ஜாக் மாவின் விமர்சனமும், பின்னர் அவரின் நிறுவன பங்குகளுக்கு சீன அரசு விதித்த தடையும் நேர்மறையான இந்தக் கருத்தை நம்ப முடியாமல் செய்தன.

அவர் சீனாவின் அழுத்தத்தால் தான் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை; அவர் வீட்டுச்சிறையில் இருக்கிறார் என உலகமே நம்பியது. இந்த நிலையில் தான் சீனாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், ஜாக் மா தோன்றும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், ஊரகப் பகுதிகளிலுள்ள ஆசியர்களுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனையை ஜாக் மா வழங்கியதாகவும் அவர் ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் ஜாக் மா, “நானும் எனது நண்பர்களும் கல்வி தொண்டு செய்வதாக முடிவெடுத்துள்ளோம். கிராமப்புறங்களில் கல்வியை வளர்த்து புத்துயிர் ஊட்டுவது சீனாவிலிருக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களின் தலையாயக் கடமை” என்று பேசியிருக்கிறார்.

இது ஒரு வகையில் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்திருந்தாலும், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஏன் பொதுவெளியில் காணப்படுவதில்லை என்பதற்கான காரணத்தையும் கூறவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த கலக்கத்துடன் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.