பைக்கில் எடுத்துச் செல்லப்பட்டது ‘வாக்குப்பதிவு இயந்திரங்கள்’ அல்ல!

 

பைக்கில் எடுத்துச் செல்லப்பட்டது ‘வாக்குப்பதிவு இயந்திரங்கள்’ அல்ல!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த சூழலில், வேளச்சேரி அருகே வாக்குப்பதிவு இயந்திரம் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு சென்னை தரமணியில் பைக்கில் சென்ற 3 பேர், 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர். இதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் புகாரளித்தனர்.

பைக்கில் எடுத்துச் செல்லப்பட்டது ‘வாக்குப்பதிவு இயந்திரங்கள்’ அல்ல!

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரிய வந்தது. வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி, அவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால், அதை ஏற்காத அரசியல் கட்சிகள் இச்சம்பவத்துக்கு கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றது தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு இயந்திரங்கள் அல்ல என தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பழுதான 2 விவிபேட் இயந்திரங்களும் 2 மாற்று இயந்திரங்களும் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்களை கவனக்குறைவாக எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.