கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் வெரிகோஸ் வெயின் பிரச்னை வருமா?

 

கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் வெரிகோஸ் வெயின் பிரச்னை வருமா?

கால் மீது கால் போட்டு அமர்வது பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. அலுவலகத்தில், உணவு அருந்தும் போது, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, ஓய்வாக தொலைக்காட்சி, மொபைல் பார்க்கும் போது கால் மீது கால் போட்டு அமர்வதில் தனி சௌகரியம், திருப்தியே உள்ளது.

கால் மீது கால் போட்டு அமர்ந்தால் கால் மரத்துப் போதல் உள்ளிட்ட உடனடி பிரச்னை தொடங்கி, உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பெரிய பிரச்னைகள் வரை ஏற்படும் என்ற கருத்து உள்ளது. கால் மீது கால் போட்டு அமரும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும்போது கால் மீது கால் போட்டு அமர வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் வெரிகோஸ் வெயின் பிரச்னை வருமா?

அதே நேரத்தில் கால் மீது கால் போட்டு அமர்ந்தால் நரம்பு புடைப்பு பாதிப்பு என்று பொதுவாக கூறப்படும் வெரிகோஸ் வெயின் வரலாம் என்று பலரும் நினைக்கின்றனர். இது உண்மை இல்லை. வெறும் வதந்திதான்.

காலில் இருந்து இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் வால்வுகள் தளர்வு அடையும் போது வெரிகோஸ் வெயின் பிரச்னை ஏற்படுகிறது. காலில் உள்ள ரத்தக் குழாயில் மேலே செலுத்தப்பட்ட ரத்தம் புவி ஈர்ப்பு விசை காரணமாக மீண்டும் கீழே வந்துவிடக் கூடாது என்பதற்காக தடுப்பணை போன்று வால்வுகள் உள்ளன. இந்த வால்வு உள்ள பகுதியில் ரத்தக் குழாய் வீக்கம் அடையும் போது வால்வால் ரத்தம் கீழே இறங்குவதைத் தடுக்க முடியாத நிலை வருகிறது.

கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் வெரிகோஸ் வெயின் பிரச்னை வருமா?

நீண்ட நேரம் நின்று, உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்னை வரலாம். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களைக் காட்டிலும் நின்று வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகளுக்கு இந்த பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், கால் மீது கால் போட்டால் வெரிகோஸ் வரும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

கால் மீது கால் போட்டு அமரும் போது நம்முடைய உடலின் பாஸ்ச்சர் மாறுகிறது. இதனால் முதுகு, கழுத்து வலி ஏற்படலாம். உடலில் அமைப்பில் மாற்றம் வரும்போது நரம்புகள் அழுத்தப்படலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அனைத்துக்கும் மேலாக கால் மீது கால் போட்டு அமரும் போது ரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும் என்றும் பெண்களுக்கு இனப்பெருக்க மண்டல உறுப்புகளில் பிரச்னை ஏற்படலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, முடிந்த வரை கால் மீது கால் போட்டு அமர்வதைக் கொஞ்சம் தவிர்க்கலாமே!