இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் குழந்தை கருப்பாகப் பிறக்குமா?

 

இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் குழந்தை கருப்பாகப் பிறக்குமா?

பெண்கள் பொதுவாக சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்னை போதுமான அளவு ரத்தம் இல்லாமைதான். பெரும்பாலான பெண்களை பரிசோதனை செய்து பார்த்தால் ஹீமோகுளோபின் அளவு கம்மியாக இருப்பதைக் காணலாம். அதிலும் கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக தாய், சேய் என இரண்டு பேரின் உடல் நலமும் பாதிக்கப்படுவது தொடர்கிறது. அதே நேரத்தில் இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் குழந்தையின் நிறம் கருப்பாகிவிடும் என்ற எண்ணமும் உள்ளது. இது உண்மையா என்று பார்ப்போம்.

இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் குழந்தை கருப்பாகப் பிறக்குமா?

உண்மையில் குழந்தையின் நிறத்துக்கும் ஊட்டச்சத்து மாத்திரைக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண் மற்றும் பெண் மரபணு சேர்க்கையில்தான் குழந்தையின் நிறம் முடிவு செய்யப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவு, பாணம் எதுவும் குழந்தையின் நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் இரும்புச் சத்து நம்முடைய உடலில் போதுமான அளவுக்கு ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக தேவை. இந்த சிவப்பணுக்கள்தான் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு போய் சேர்க்கிறது. போதுமான அளவு ரத்தம் இல்லை என்றால் குழந்தைக்குச் செல்லும் ரத்தம் மற்றும் ஊட்டச்சத்து அளவு குறையும். இது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது இல்லை.

போதுமான அளவில் இரும்புச்சத்து கிடைக்காவிட்டால், குறைப் பிரசவம், குழந்தையின் உருவம் சிறிதாக இருப்பது, பிரசவத்தின் போது எடை குறைவாக இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

போதுமான இரும்புச்சத்து கிடைக்காவிட்டால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே தான் இரும்புச் சத்து மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சத்து மாத்திரை வேண்டாம் என்றால் உணவில் இருந்தே தேவையான இரும்புச்சத்தைப் பெறலாம். பச்சை கீரை, காய்கறிகள், பருப்பு வகைகள், முளை விட்ட பயிறு, பீட்ரூட் உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தேவையான இரும்புச்சத்து கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.