இந்திய சுழலில் சுருண்டது இங்கிலாந்து!

 

இந்திய சுழலில் சுருண்டது இங்கிலாந்து!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவதுப் போட்டியில் இந்தியாவும் வென்றது.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்ல இரு அணிகளுக்கும் இந்த வெற்றி முக்கியமானது என்பதால் இரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இங்கிலாந்து அணியில் மொயின் அலி ,ரோரி பன்ஸ்,ஓலி ஸ்டோன்ஸ்,லாரன்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆண்டர்சன்,ஆர்ச்சர்,பேர்ஸ்டாவ், கிராவ்லி ஆகிய நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியைப் பொறுத்தவரையில் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு , ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர்.

பகலிரவு ஆட்டம் பிங்க் நிற பந்து என்பதால் இங்கிலாந்து அணி 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது, ஆடுகளத்தை நன்கு கணித்த இந்திய அணி மூன்று பிரதான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லேவை டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியாவின் இஷாந்த் சர்மா, இந்திய அணிக்காக தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அடுத்து வந்த ஜானி பேரிஸ்டோவை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார் அக்ஸர் படேல். இந்திய அணிக்கு மேலும் நம்பிக்கை தரும் விதமாக கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் சுழலில் எல்பிடபுள்யூ ஆட்டமிழந்தார். ஒருபுறம் கிராவ்லி மட்டும் அதிரடியாக ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

இந்திய சுழலில் சுருண்டது இங்கிலாந்து!

இதற்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் சொந்த மண்ணில் அசத்தலாக பந்துவீசிய அக்ஸர் படேல் 6 விக்கெட்டையும், அஸ்வின் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. கில் 11 ரன்களிலும், புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தனர், ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் விராட் கோலி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.